மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி ஏன் முக்கியம்?

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், TVKHQ

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க, அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் த.வெ.க உள்ளதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், 'அவ்வாறு பெறாவிட்டால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான பிம்பத்தில் சரிவு ஏற்படும்' என்கின்றனர்.

அதற்கேற்ப, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு, முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தற்போது த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக வழக்கறிஞர் பரந்தாமனும் அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத்தும் களமிறங்குகின்றனர். அதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தற்போது த.வெ.க வேட்பாளராக விசில் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

இவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக சுகன்யாவும் அ.தி.மு.க வேட்பாளராக பானுமதியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார்?

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், Maragathamkumaravel/Facebook

படக்குறிப்பு, மரகதம் குமரவேல்

தேர்தலுக்கு சுமார் மூன்று வாரகால இடைவெளி உள்ள நிலையில், தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் பணியில் தி.மு.க, த.வெ.க வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை த.வெ.க தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக ஆதவ் அர்ஜூனாவும் தாராபுரம் தொகுதியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் அருண் ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியாரை நியமித்து த.வெ.க தலைமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தி.மு.க தரப்பில் மதுராந்தகம் தொகுதிக்குத் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் தாராபுரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

'வெற்றி எளிதானதல்ல'

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், Paranthamen/Facebook

படக்குறிப்பு, மதுராந்தகம் (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளராக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

த.வெ.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். 'அவர்கள் இந்தமுறை வெற்றி பெறுவார்களா?' என்ற பேச்சு எழுந்துள்ளது.

"த.வெ.க தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு வரும் இடைத்தேர்தல் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் த.வெ.கவுக்கு ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"த.வெ.க நினைப்பதுபோல இந்த இரு இடைத்தேர்தல்களிலும் எளிதாக வெற்றி பெறுவது சாத்தியமானதாக தோன்றவில்லை" என்கிறார் அவர்.

"தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வெற்றி பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால் விஜய் என்ற பிம்பத்தின் மதிப்பு குறைந்துவிடும்" என, பத்திரிகையாளர் சிவப்பிரியன் கூறுகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பிருந்த நிலையைவிட, தற்போது விஜயின் செல்வாக்கு அதிகரித்துவிட்டதாக த.வெ.க நிர்வாகிகள் கருதுவதாகக் கூறும் அவர், "இடைத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றால் அவரின் பிம்பம் சரியவில்லை என்பது உறுதியாகும்" என்கிறார்.

த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், 'இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்கிற வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், KanithaSambath

படக்குறிப்பு, மதுராந்தகம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ளதா?

சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 7194 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலையை வீழ்த்தினார். இதில் தி.மு.க மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தாராபுரத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சத்யபாமா, 16727 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் இந்திராணியை தோற்கடித்தார். இங்கு த.வெ.க மூன்றாம் இடம் பிடித்தது.

"இரு தொகுதிகளிலும் விசில் சின்னத்தை மீறி இரட்டை இலைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்" என்கிறார் சிவப்பிரியன்.

"த.வெ.கவுக்கு சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்காக வேறு கட்சியில் வெற்றி பெற்றவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து போட்டியிட வைப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய அணுகுமுறையாக உள்ளது" என்கிறார் அவர்.

"இந்த இரு தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள், த.வெ.க வேட்பாளர்களை எவ்வாறு அணுகப் போகிறார்கள் என்பது முக்கியமானது" எனவும் அவர் தெரிவித்தார்.

"இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளும் அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளாக உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க, த.வெ.க ஆகிய கட்சிகளைத் தவிர்த்து அ.தி.மு.கவுக்கு இத்தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர்" என்கிறார், ஊடகவியலாளர் ஜென்ராம்.

அந்த நம்பிக்கையைப் புறக்கணித்துவிட்டு இரு எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறும் அவர், "இதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் அ.தி.மு.கவுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பது முக்கியமான கேள்வி. மக்கள் அவ்வாறு நினைப்பார்கள் எனவும் உறுதியாகக் கூற முடியவில்லை" என்கிறார்.

'அ.தி.மு.க இல்லாதது போன்ற தோற்றம்'

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக

பட மூலாதாரம், TVK

"இடைத்தேர்தலில் அ.தி.மு.க வென்றாலும் த.வெ.க அவர்களை எடுத்துக் கொள்ளும் என மக்கள் நினைத்தால் தி.மு.கவை மாற்றாக கருதலாம் அல்லது ஆளும்கட்சி வெற்றி பெற்றால் தொகுதிக்கு நல்லது என்ற மனநிலையுடன் அணுகப் போகிறார்களா என்பது முக்கியம்" என்கிறார் ஜென்ராம்.

"அ.தி.மு.க, தி.மு.கவுக்கு வாக்களித்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற எண்ணம் ஏற்பட்டால் மக்கள் த.வெ.கவுக்கு வாக்களிக்கலாம். ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக கருதினால் அதன் விளைவு வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்" என சிவப்பிரியன் குறிப்பிடுகிறார்.

"அ.தி.மு.க வென்ற தொகுதிகள் என்றாலும் உள்கட்சி மோதலால் அக்கட்சி பிளவுபட்டுள்ளது" என்கிறார் அவர்.

"தி.மு.க, த.வெ.க ஆகிய கட்சிகளைத் தோற்கடித்து தான் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. களத்தில் அ.தி.மு.க இல்லாதது போன்ற தோற்றத்தை த.வெ.க உருவாக்குகிறது. தங்களுக்குப் பலம் உள்ளதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்" என்கிறார் ஜென்ராம்.

'தேர்தலில் எதிரொலிக்கும் பிரச்னைகள்'

தி.மு.க எதிர்ப்பை மையப்படுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் தி.மு.க தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தி.மு.கவுக்கு பலப் பரீட்சையாக இடைத்தேர்தல் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.

"கட்சியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கான முக்கியமான வாய்ப்பாக இது உள்ளது. தவிர, அ.தி.மு.க உடன் எந்த உறவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டிய நிலையில் தி.மு.க உள்ளது" என்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தி.மு.க வந்ததை மேற்கோள் காட்டிப் பேசும் அவர், "அரசியல் களத்தை விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தி.மு.க போட்டியிடுகிறது. மூன்று மாதகால த.வெ.க ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என தி.மு.க பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது" எனக் கூறுகிறார்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அமில பரிசோதனையாக இடைத்தேர்தல் உள்ளதாகக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " இரு தொகுதி மக்களின் தலையிலும் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதாக இரண்டு கட்சிகளும் பிரசாரம் செய்யும். விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகிய பிரச்னைகள் பெரிதாக பேசப்படும்" எனக் குறிப்பிடுகிறார்.

இந்த விவகாரத்தில் மாற்றுக் கோணத்தை முன்வைக்கும் ஜென்ராம், "இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தி.மு.கவுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. ஆனால், த.வெ.கவை வீழ்த்துவதை அரசியல்ரீதியான வெற்றியாக அக்கட்சி பார்க்கிறது" என்கிறார்.

"தி.மு.க கூட்டணியில் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்களைக் கொண்டு த.வெ.க ஆட்சி நடத்துவதாக த.வெ.க மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதை சரிசெய்வதற்கு பெரும்பான்மையை நோக்கி அவர்கள் நகரும் வேலைகளில் தீவிரம் காட்டுகின்றனர்" என்கிறார் ஜென்ராம்.

"இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் த.வெ.கவுக்கு வாக்களித்த மக்கள் உள்ளனர். கடந்த 100 நாள் ஆட்சியைப் பார்த்து தங்கள் முடிவில் இருந்து அவர்கள் விலகுகிறார்களா.. ஆதரிக்கிறார்களா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தெரியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு