தவெக அரசை ஆதரித்தாலும் 2 தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனி அணியாக போட்டி ஏன்?

நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அக்கட்சிகள் அறிவித்துள்ளன.
இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், எந்த கூட்டணியிலும் இடம்பெற போவதில்லை என்ற முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருந்ததாகவும் அதே நிலை இப்போதும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் பொருட்டு தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளித்ததாக அவர் கூறினார்.
"தற்போது நடைபெறும் தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்" என்றார் அவர்.
ஜனநாயக அமைப்புகள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு இடமிருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 15ஆம் தேதி இரு வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தவகெ ஆட்சியில் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனவும் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
"தவெகவில் உள்ள நிர்வாகிகள் சிலர் இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டபோது, கூட்டத்துக்குப் பிறகு முடிவை அறிவிப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம்" என்றார்.
"உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் கிடப்பில் இருக்கின்றன. அந்த கோரிக்கைகளை செயல்படுத்த நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்" என்றார் வீரபாண்டியன்.
சட்டப்பேரவையில் தங்கள் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தேர்தல் பரப்புரையில் அரசு தவறிய விஷயங்களை குறிப்பிடுவோம் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது என்ன?

பட மூலாதாரம், P Shanmugam/FB
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளோம்.
சட்டப்பேரவை நிகழ்வுகள், பட்ஜெட் போன்றவற்றில் பல விஷயங்களை சுட்டிக்காட்டி அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டிருப்பதாக தெரிவித்த சண்முகம், அதில் சிலவற்றை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் பலவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி தேர்தலில் களம் காண்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்காக தாங்கள் வெளியில் இருந்து அளித்துள்ள ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறினார்.
"ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை" என கூறிய அவர், "திமுகவுக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறுவது தவறானது" என்றார்.
எந்த அணியிலும் தாங்கள் இல்லை என்றும் சண்முகம் தெரிவித்தார்.
ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ஏன் ராஜிநாமா செய்தார்கள் என்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணத்தையும் கூற முடியாது என அவர் கூறினார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்றது குறித்து எந்தவிதமான விவரங்களும் வெளியிடவில்லை எனக்கூறிய அவர், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இடைத்தேர்தல் எப்போது?
தமிழகத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் இருந்த காரணத்தால், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவற்றில் மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தாராபுரம், திருப்பூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
இவ்விரு தொகுதிகளில் கடந்த 9 ஆம் தேதி துவங்கிய இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 16 ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த நாள் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். செப்டெம்பர் 19 அன்று வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள். அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது; அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எணணிக்கை நடக்கவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, 81,100 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்ததாக வந்த திமுக வேட்பாளர் இந்திராணியை (பெற்ற வாக்குகள்: 64373) விட 16,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் தவெக மூன்றாமிடம் பிடித்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கெளரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்றிருந்தார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் தவெக இரண்டாமிடம் பிடித்திருந்தது. அக்கட்சிக்கு 62,090 வாக்குகள் கிடைத்திருந்தன. திமுக 59,838 வாக்குகள் பெற்றிருந்தது. இதனால் தவெக வேட்பாளரை அதிமுக வேட்பாளர் 7194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
ஆனால் அதிமுக சார்பில் வென்ற இருவரும், தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் இருவரும் அதே தொகுதிகளில் தற்போது தவெக சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மதுராந்தகம் தொகுதியில் எழும்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ. பரந்தாமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































