16 வயது சிறுவன் வயிற்றில் 2 செயின்கள், நகவெட்டி, ஆணி, 23 நாணயங்கள் - 'பணம் வாங்காமல் சிகிச்சை' அளித்த மருத்துவர்

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் வயிற்றில் ஆணிகள், நகவெட்டி, ஹேர்பின், செயின் மற்றும் 23 நாணயங்கள் உள்பட குறைந்தது 40 பொருட்கள் இருந்துள்ளன என மருத்துவர் தெரிவித்தார்.
அச்சிறுவனின் தாய் வனிதா, தன் மகனுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், வயிற்றில் பல்வேறு பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அப்பொருட்கள் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டன.
ஆனால் அப்பொருட்கள் எப்படி சிறுவனின் வயிற்றுக்குள் சென்றன? இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
'நாணயங்களை விழுங்கும் பழக்கம்'
"எனது மகனுக்கு பணம் வாங்காமல் சிகிச்சை அளித்து, காப்பாற்றிய மருத்துவர் சுந்தர பாண்டியனுக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம்" என்று பிபிசி தமிழிடம் கூறினார், 16 வயதான பிரித்திக் ரோஷன்என்ற சிறுவனின் தாயார் வனிதா.
தானும் தனது கணவர் மகாலிங்கமும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், "எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். தினமும் கூலி வேலைக்கு சென்றால் தான் எங்களுக்கு வருமானம். அதை வைத்து தான் குடும்பத்தை காப்பாற்றுகிறோம்" என்றும் கூறினார்.
கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது மகன் பிரித்திக் ரோஷன் வயிற்று வலியால் துடித்ததுடன் வாந்தியும் எடுத்ததாகவும் குறிப்பிட்ட அவர், "எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. சில நாட்களாகவே என்னிடம் காசு கேட்பான். நானும் அவ்வப்பொழுது தருவேன். தொடர்ந்து கேட்பதால் எனக்கு சந்தேகம் வந்தது. அன்றும் அப்படித்தான் என்னிடம் காசு வாங்கிய பின், சில நொடிகளில் வாயில் போட்டு விழுங்கி விட்டான். அப்பொழுது தான் தெரிந்தது இவன் தினமும் காசை விழுங்குகிறான் என்று. சில நொடிகளையே வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தான்" என்று விவரித்தார்.
"எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு எங்கள் அய்யம்பாளையம் கிராமத்திலிருந்து திருவண்ணாமலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கிருந்த மருத்துவர் சுந்தரபாண்டியன், உடனடியாக எனது மகனின் வயிற்றுப் பகுதியில் பரிசோதனை செய்து பார்த்தார்."
"தொடர்ந்து பரிசோதனைகள் செய்தபோது வயிற்றில் கூர்மையான உலோக பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது" என்கிறார் வனிதா.
தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவர் என்னிடம் விசாரித்த போது, வீட்டில் அடிக்கடி நகவெட்டி, செயின் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போகும், சில நாட்களாக என்னிடம் தினமும் காசு வாங்கினான் என்றும் கூறினேன். நாங்கள் ஏழை என்பதை தெரிந்து கொண்ட மருத்துவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை, நிச்சயமாக தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாகக் கூறினார்" என்றார்.

'கபடி விளையாடும் போது விழுந்த அடி'
தனது மகன் பிரித்திக் ரோஷன் ஒன்பதாம் வகுப்பு வரை நன்றாகவே படித்து வந்ததாகவும் அவனுக்கு கபடி பிடித்தமான விளையாட்டு என்பதால் அடிக்கடி கபடி விளையாடுவான் என்று கூறிய வனிதா, "ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, கபடி விளையாட்டில் கீழே விழுந்து விட்டான். அதனால் தாடைப் பகுதியில் பலமாக அடிபட்டது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய வனிதா, "அன்று முதல் அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். மேற்கூரையைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பான். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் அவன் பள்ளியிலிருந்து என்னை அழைத்த ஆசிரியர்கள், 'அவன் முன்பு போல் சரியாக படிப்பதில்லை, தனியாக ஏதோ பேசிக் கொள்கின்றான் என்று தெரிவித்தார்கள்'."
"எனக்கு ஒன்றும் புரியவில்லை உடனடியாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நரம்பு மருத்துவர்களிடம் காண்பித்தேன். ஆனாலும் குணமடையவில்லை. இறுதியாக பெங்களூர் அழைத்துச் சென்று காண்பித்தேன், அங்கு பரிசோதனை செய்து மாத்திரைகள் தந்தார்கள். அதை தொடர்ந்து சாப்பிடும் போது சற்று பரவாயில்லை, ஆனால் அதிக நேரம் தூங்குவான். சரி நிச்சயமாக சரியாகும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். அவர்கள் 15 நாட்கள் கழித்து எங்களை வரச் சொன்னார்கள்" என்றார்.
ஆனால் தனது குடும்பச் சூழல் காரணமாக தன்னிடம் பணம் இல்லாததால் தொடர்ந்து பெங்களூரில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறும் வனிதா, "இடைப்பட்ட நாட்களில் தான் இந்தச் சம்பவம் நடந்து விட்டது" என்றார்.
மருத்துவர் கூறியது என்ன?

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சுந்தரபாண்டியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "16 வயது சிறுவன் பிரித்திக் ரோஷனை அவனது தாயார் அழைத்து வந்தபோது, உடனடியாக எக்ஸ்-ரே எடுத்து பார்த்தோம். சில கூர்மையான பொருட்கள் சிறுவனின் வயிற்றில் இருப்பது தெரிந்தது. தாயாரிடம் கேட்டபோது தனது மகன் சில நாட்களாக காசு வாங்குவதையும், வீட்டில் உள்ள நகவெட்டி, உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போனதாகவும் தெரிவித்தார். அன்று (ஆகஸ்ட் 22) தன் கண் முன்னால் ஒரு காசை விழுங்கி விட்டான் என்றும் கூறினார்" என்று விவரித்தார்.
உடனடியாக நள்ளிரவில் மயக்க மருந்து நிபுணரை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எனக்கூறிய மருத்துவர் சுந்தரபாண்டியன், "அதில் சிறுவனின் இரைப்பையில் இருந்து 23 நாணயங்கள், தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், செயின், ஆணி போன்ற பொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றினோம்" என்றார்
"தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தோம். அச்சிறுவன் வாரம் ஒரு முறை பரிசோதனைக்கு வருகிறான்" என்றும் மருத்துவர் சுந்தரபாண்டியன் கூறினார்.
"கூர்மையான பொருட்கள் செரிமானப் பாதையில் காயம் அல்லது துளையை ஏற்படுத்தும் அபாயம் இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அச்சிறுவன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். தற்போது அவன் உடல்நிலை சீராக இருப்பதோடு, நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று மருத்துவர் கூறினார்.
"மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெறும் குழந்தைகள், பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில், பெற்றோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனநலப் பிரச்னை உள்ளவர்களைப் பார்த்துக் கொள்வதும், அவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிப்பதும் பெற்றோரின் பொறுப்பு" என்கிறார் மருத்துவர் சுந்தரபாண்டியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































