ஈஃபிள் கோபுர சர்ச்சையால் இந்து மதத்தின் பிம்பம் பாதிக்குமா? இந்தியா மற்றும் வெளிநாட்டில் என்ன பேசப்படுகிறது?

பட மூலாதாரம், @BAPSParis
பிரான்சின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக திங்கள்கிழமை மூடப்பட்டது.
வார இறுதியில் இந்து மதக் குழுவினர் அங்கு வந்தபோது, பெண் ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"இந்து மதக் குழுவினர் வந்தபோது, பெண் ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறுமாறும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது," என்று ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டாவோன் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பிரான்ஸ் அரசியல்வாதிகளிடமிருந்தும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதையடுத்து, நகர அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சர்ச்சையின் மையத்தில் உள்ள போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) என்ற இந்து மத அமைப்பு இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது. இந்தப் பயணம் ஈஃபிள் கோபுர நிர்வாகக் குழுவுடன் ஒருங்கிணைத்தே ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், யாரும் உள்ளே நுழைவது தடுக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
"எழுப்பப்பட்டுள்ள கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எங்களுடன் வந்திருந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மற்றவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், வழக்கமான திறப்பு நேரத்துக்கு முன்பான அதிகாலை நேரத்தில் ஈஃபிள் கோபுர நிர்வாகக் குழுவுடன் ஒருங்கிணைத்து இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் யாரும் ஈஃபிள் கோபுரத்துக்குள் நுழைவது தடுக்கப்படவில்லை. இருப்பினும், இதனால் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தாலோ அல்லது சிரமத்துக்கு ஆளாகியிருந்தாலோ, நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்," என்று பிஏபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 100 பேர் பங்கேற்ற குழுவின் பயணத்தின்போது, கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது.
தங்களது பயணத்தின் ஒரு நிபந்தனையாக பெண் ஊழியர்களுடன் குறைந்த அளவிலான தொடர்பு மட்டுமே இருக்க வேண்டும் என்று அந்தக் குழுவினர் கோரியதாக ஈஃபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் எஸ்இடிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இதுபோன்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடாது," என்று எஸ்இடிஇ தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை, இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "பாரிஸில் பிஏபிஎஸ் அமைப்பு ஒரு கோவிலைத் திறந்தது குறித்து எங்களுக்குத் தெரியும். கோபுரம் தொடர்பான இந்தக் குறிப்பிட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, இது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான விவகாரம்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், @BAPSParis
இந்து மத வெறுப்பு அதிகரிக்குமா?
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் விவாதத்தையும், பிஏபிஎஸ் அமைப்புக்கு எதிரான விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. தி நியூயார்கர் இதழின் உலக விவகாரங்கள் கட்டுரையாளர் இஷான் தாரூர், எக்ஸ் தளத்தில், "பிஏபிஎஸ் பிற்போக்கான அமைப்பு. அமெரிக்காவிலும் இந்த அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது," என்று பதிவிட்டார்.
இந்தியாவில் வலதுசாரி கருத்துகளைக் கொண்ட சில பத்திரிகையாளர்களும் பிஏபிஎஸ் அமைப்பை விமர்சித்துள்ளனர்.
ஓப் இந்தியா ஆசிரியர் நுபுர் ஜே. ஷர்மா, இந்தச் சம்பவம் வெளிநாடுகளில் இந்து மத வெறுப்பை அதிகரிக்கக்கூடும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அவர் தனது பதிவில், "மேற்கத்திய நாடுகளுக்கு பிஏபிஎஸ் இந்து மத வெறுப்பை தட்டில் வைத்து பரிமாறியுள்ளது. ஏற்கனவே இந்துக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற இனவெறி மற்றும் பாகுபாட்டை இது மேலும் மோசமாக்கும். இப்போது பிரான்சில் பிஏபிஎஸ் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்துக்கள் பிற்போக்கானவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்," என்று குறிப்பிட்டார்.
மேலும், "பிஏபிஎஸ் செய்ததை நான் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை. பெண்களுடன் தொடர்பு கொள்ள பிரச்னை இருந்தால், அவர்கள் தங்கள் ஆசிரமங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் செயல்கள் காரணமாக இந்துக்கள் தேவையற்ற வெறுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது என்பதையே நான் மிகவும் வெறுக்கிறேன். அதேவேளையில், அவர்களில் ஒரு பகுதியினர் இந்துக் கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றும் அவர் எழுதியுள்ளார்.
நுபுர் ஷர்மாவின் பதிவை மறுபதிவு செய்த இடதுசாரி எழுத்தாளர் சலீல் திரிபாதி, "நுபுரின் பதிவை நான் ஒருபோதும் மறுபதிவு செய்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. தனது தனித்துவமான பாணியில், பிஏபிஎஸ் முட்டாள்தனமான செயலைச் செய்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்," என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
'பெண்களைத் தவிர்க்க விரும்பினால் ஈஃபிள் கோபுரத்துக்குச் சென்றது ஏன்?'
"பிஏபிஎஸ் துறவிகள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதால், பெண்களுடன் பேசவோ, அவர்களைத் தொடவோ அல்லது சமூக ரீதியாக பழகவோ முடியாது," என்று பிரிட்டிஷ் செய்தி இணையதளமான தி இண்டிபெண்டன்ட் தெரிவித்துள்ளது.
அந்த ஊடகத்தின் தகவலின்படி, "பெண்களுக்கு பாகுபாடு காட்டுவதோ அல்லது நிராகரிப்பதோ பிஏபிஎஸின் நோக்கம் அல்ல. மாறாக, துறவிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், ஆன்மிக முன்னேற்றத்திற்குமான தனிப்பட்ட கட்டுப்பாடாக இதைக் கடைப்பிடிக்கிறார்கள்" என்று அந்த அமைப்பு விளக்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் கன்வால் சிபாலும் பிஏபிஎஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில், "இது தொடர்பான தகவல்கள் உண்மையாக இருந்தால், தங்களது காலில் தாங்களே சுட்டுக்கொண்டதற்கு சமமான செயல் இது," என்று பதிவிட்டார்.
மேலும், "பெண்களுடனான தொடர்பைக் குறைக்க விரும்பினால், ஈஃபிள் கோபுரத்துக்குச் சென்றதே ஏன்? பெண்ணிய சிந்தனைகளும் இயக்கங்களும் வலுவாக உள்ள ஒரு நாட்டில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஈஃபிள் கோபுர நிர்வாகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும்," என்றார்.
"உலகில் அதிகம் பார்வையிடப்படும் நினைவுச் சின்னங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் தொடர்பான விவகாரம் என்பதாலும், ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் கோபுரம் ஒரு நாள் மூடப்பட்டதாலும், இந்தச் சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது. இது மேற்கத்திய நாடுகளில் இந்து மதத்திற்கு எதிரான பிரசாரங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸைச் சேர்ந்த தொழில்முனைவர், சமூக ஊடக விமர்சகர் மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர் ஆர்னோ பெர்ட்ரான்டும் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
"இது நம்ப முடியாததாகத் தோன்றுகிறது. ஆனால் நான் இருமுறை சரி பார்த்தேன். தகவல் உண்மைதான். 93 வயதான தங்களது குரு வருகை தருவதற்காக அனைத்து பெண்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஒரு இந்து மதப் பிரிவு கோரியதால், திங்கள்கிழமை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது," என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
மேலும், "இந்தப் குழுவின் பெயர் பிஏபிஎஸ். குஜராத்தின் போச்சாசன் கிராமத்தை மையமாகக் கொண்டு, அக்ஷர் புருஷோத்தம நம்பிக்கையைப் பின்பற்றும் சுவாமிநாராயண பக்தர்களின் அமைப்பு என்பதே இதன் பொருள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"இது மிகுந்த செல்வாக்கும் செல்வமும் கொண்ட அமைப்பு. பிரதமர் நரேந்திர மோதியின் பாஜ கட்சியுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுவதற்காக இந்த அமைப்பு அறியப்படுகிறது. மேலும், உயிருடன் உள்ள குருவுக்கு முழுமையான கீழ்ப்படிதலே கடவுளை அடையும் ஒரே வழி என்று அதன் கொள்கை வலியுறுத்துகிறது," என்றும் அவர் எழுதியுள்ளார்.
"இது முதல் சர்ச்சை அல்ல. 2021-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள அதன் மிகப்பெரிய கோவில் வளாகத்தில் எஃப்பிஐ சோதனை நடத்தியது. அப்போது, பெரும்பாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போலியான மத விசாக்களில் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தினமும் 13 மணி நேரம் சுமார் ஒரு டாலர் ஊதியத்திற்கு வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன," என்றும் அவர் குறிப்பிட்டார்.
''சமீபத்தில், பிரான்சில் பிஏபிஎஸ் மிகப்பெரிய புதிய கோவிலைத் திறந்துள்ளது. அந்தக் கோவிலின் திறப்பு விழாவில் அவர்களின் குரு (மகந்த் சுவாமி மகாராஜ்) பங்கேற்றிருந்தார். அப்போது, ஈஃபிள் கோபுரத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்ததார். ஆனால், அவர்களது மதக் கொள்கைகளின்படி, பெண்கள் அவருக்கு முன்னால் இருக்கக் கூடாது.'' என அவர் கூறியுள்ளார்

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சைகள்
2021-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 200 தலித் தொழிலாளர்கள், பிஏபிஎஸ் அமைப்புக்குச் சொந்தமான இந்துக் கோயிலைக் கட்டும் பணியில் தினமும் 12 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 1.20 டாலர் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை பிஏபிஎஸ் அமைப்பு மறுத்தது. மேலும், அமெரிக்க சட்ட விவகாரத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் குற்றவியல் விசாரணையை முடித்துவிட்டது.
இந்த வழக்கு, நியூ ஜெர்சியில் உள்ள நியூவர்க் நகரிலுள்ள நீதிமன்றத்தில், சுமார் 200 இந்தியத் தொழிலாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடை செய்யும் சட்டங்கள் உட்பட, அமெரிக்காவின் அடிப்படைச் சட்டங்கள் மீறப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிஏபிஎஸ் கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடுமையாக எதிர்வினையாற்றியது.
அதைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள பிஏபிஎஸ் கோவிலும் சேதப்படுத்தப்பட்டது. அப்போது கோவில் சுவர்களில் மோதியை குறிவைத்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
சஃபோக் கவுன்டி காவல்துறையினரின் தகவல்படி, அந்த வாசகங்களில் மிரட்டல் செய்திகளும், இந்துக்களுக்கு எதிரான அவதூறான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































