சௌதி தாக்குதலை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானும் துருக்கியும் ஏன் மெக்கா ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை?

பட மூலாதாரம், @SPA
செளதி அரேபியாவுக்கு எதிராக எந்தத் தாக்குதலும் நடந்தால் மெக்கா பாதுகாப்பு கூட்டணி செயல்படுத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பினர் நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்று அவர் எச்சரித்தார்.
செளதி அரேபியா தனது தெற்கு பகுதியில் உள்ள பல எரிசக்தி மையங்களை மூடியுள்ள சூழ்நிலையில்தான் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செளதி மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.
இரான், அமெரிக்காவுக்கு எதிராக மேலும் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ள நேரத்திலேயே ஹூத்தி தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், "இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். தாக்குதல் நடந்தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மதிப்போம். இதில் எந்தத் தெளிவின்மையும் இருக்கக் கூடாது.'' என்றார்
மேலும், ஹூத்திகள் தங்களது நடவடிக்கைகள் "இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கூடும்" என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
துருக்கி, செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த மாதம் மெக்காவில் கையெழுத்திடப்பட்டது.
செளதி அரேபியா பாகிஸ்தானை தொடர்புகொண்டதா என்பது தெரியாது என்று ஆசிப் கூறியபோதும், "ஒப்பந்தத்தின்படி உதவுவது அல்லது செயல்படுவது எங்களின் பொறுப்பு" என மீண்டும் வலியுறுத்தினார்.
இது தாக்குதல் நோக்கமுடைய ஒப்பந்தமல்ல. பாதுகாப்பு நோக்கமுடையது. உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பதிலளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஏமன் மோதலுக்குள் செளதியை மேலும் இழுக்கக் கூடாது என்று ஹூத்திகளிடம் கேட்டுக்கொண்டார். அப்படிச் செய்யும் எந்த முயற்சியும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கூடும் என்றார்.
"நிலைமை அமைதியாகும் என நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், @SPA
துருக்கியும் செளதி அரேபியாவும் என்ன கூறின?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தனது அறிக்கையில் ஹூத்தி தாக்குதலைக் கண்டித்ததோடு, பாகிஸ்தான் செளதியுடன் நிற்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், மெக்கா ஒப்பந்தத்தை அவர் குறிப்பிடவில்லை. அதேபோல், துருக்கியும் தாக்குதலைக் கண்டித்துள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் வகையிலான எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.
"சமீபத்தில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபியாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்துள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளன. செளதி அரேபியாவின் இறையாண்மைக்கும் நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டிற்கும் எங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என துருக்கி வெளியுறவு அமைச்சகம் கூறியது.
"ஏமனில் நிலவும் மோதலை நிரந்தர அரசியல் தீர்வின் மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் இந்தத் தாக்குதல்கள் பாதிக்கின்றன. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்."
மெக்கா ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து துருக்கி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள மூன்று நாடுகளிலும், ராணுவ ரீதியாக மிகவும் நவீனமான சக்தியாக துருக்கி கருதப்படுகிறது.
மறுபுறம், செளதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவூத், "ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாங்களே சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர். எனவே, பேச்சுவார்த்தை ரீதியான நடவடிக்கைக்கான வாயில் மூடப்படுகிறது என்று நான் சொல்லமாட்டேன். செளதி அரேபியா எப்போதும் அமைதிக்கும் பேச்சுவார்த்தை ரீதியிலான தீர்வுகளுக்கும் ஆதரவளிக்கும்." என்றார்
"ஆனால், தன்னைத்தானே பாதுகாப்பதில் செளதி அரேபியா ஒருபோதும் தயங்காது. தனது நலன்களைப் பாதுகாப்பதிலும், தனது நலன்களுக்கும் சகோதர நாட்டு ஏமனின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கும் அவசியமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் அது தயங்காது."

பட மூலாதாரம், Getty Images
மெக்கா ஒப்பந்தம் ஏன் செயல்படுத்தப்படவில்லை?
மெக்கா ஒப்பந்தம் உண்மையில் எந்த சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டது என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.
பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை நெருக்கமாக கவனித்து வருபவர் ஹபீபுல்லா கான். அவரது கருத்துப்படி, ஒரு தாக்குதல் எப்போதும் குறிப்பிட்ட புவியியல் எல்லையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
"உதாரணமாக, ஃபாக்லாந்து தீவுகளில் பிரிட்டனுக்கு எதிரான தாக்குதல் நேட்டோ உடன்படிக்கையின் கீழ் வராது. இருப்பினும், தற்போதைய தாக்குதல் செளதி அரேபியாவின் எல்லைக்குள் நடந்துள்ளது. எனவே குறைந்தபட்சம் அந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது."
"பன்முக கூட்டணிகள் நாடுகளுக்கு எதிரானவை. அவற்றின் நிழல் அமைப்புகளுக்கு எதிரானவை அல்ல. காரணம், இந்த நாடுகள் அனைத்திற்கும் தங்களுக்கென நிழல் அமைப்புகள் உள்ளன. இந்த உறவு சிக்கலானதும் நிலைகுலையக்கூடியதும் என்பதையும், இந்த அமைப்புகளில் அவர்களது செல்வாக்கு வரையறுக்கப்பட்டதுமாக இருப்பதையும் அந்த நாடுகள் அறியும். பெரும்பாலான நிழல் அமைப்புகள் கொள்கையை விட பணத்தால் இயக்கப்படுகின்றன."
'அரபு மையம் வாஷிங்டன் டிசி' என்ற சிந்தனைக் குழு, ஆகஸ்ட் 19 அன்று வெளியிட்ட கட்டுரையில், மெக்கா ஒப்பந்தத்தின் மூலம் உண்மையான ராணுவப் பதிலடி கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளது.
அந்தக் கட்டுரையின்படி, மெக்கா ஒப்பந்தம் செளதி அரேபியாவுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு மாற்றாகாது. செளதியுடன் சேர்ந்துள்ள நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் கூட்டாளிகள். இதனால்தான் இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா எந்தக் கவலையையும் வெளிப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவை யார் பாதுகாப்பார்கள்?
மெக்கா ஒப்பந்தத்தில் எந்தப் பொதுவான எதிரியும் அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் அது இரானுக்கு எதிரானதல்ல என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிதான் தெளிவாகக் கூறியிருந்தார்.
மேலும், இந்த ஒப்பந்தத்திற்கான தயாரிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன என்றும் அவர் கூறினார். இதன் நோக்கம், இந்த ஒப்பந்தத்தை தற்போதைய போரிலிருந்து தனித்துவமாகக் காட்டுவதாகும். துருக்கிக்கும் இரானுக்கும் இடையே ஒத்துழைப்பும் உள்ளது, போட்டியும் உள்ளது.
பாகிஸ்தான், இரானுடன் சுமார் 900 கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. நாட்டில் கணிசமான ஷியா மக்கள் தொகையும் உள்ளது. ராணுவ அதிகாரிகளிலும் அவர்கள் உள்ளனர். 2026 பிப்ரவரியில் இரானின் அதி உயர் தலைவரின் படுகொலைக்குப் பின்னர், பாகிஸ்தானில் பலர் இரானுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கியிருந்தனர்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே முக்கியமான மத்தியஸ்தர் பங்கையும் பாகிஸ்தான் வகித்துள்ளது. எனவே, ராணுவ மோதலில் நேரடியாக ஈடுபடுவதற்கு ஏற்ற நிலை அதற்கு இல்லை என கருதப்படுகிறது. செளதி - பாகிஸ்தான் உறவுகள் பெரும்பாலும் பரஸ்பர நலன் சார்ந்தவை என்று சொல்லப்படுகிறது.
அரபு மையம் வாஷிங்டன் டி.சி. தனது கட்டுரையில், "2025 அக்டோபரிலிருந்து ஆப்கானிஸ்தானுடனான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதில் செளதி மிகக் குறைந்த ஆர்வத்தையே காட்டியது. அதேபோல், செளதி அரேபியாவின் மோதல்களின் சுமையை ஏற்க பாகிஸ்தானுக்கும் அதிக விருப்பமில்லை. செளதி நிலப்பரப்பைப் பாதுகாக்க பாகிஸ்தான் படைகளை வழங்கக்கூடும். ஆனால், இரான் அல்லது ஹூத்திகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் அது கலந்து கொள்ளாது" என கூறியுள்ளது.
பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் ஒரே நாட்டை மட்டும் சார்ந்திருப்பது இனி புத்திசாலித்தனமான நடைமுறை அல்ல என்ற கவலையின் வெளிப்பாடாகவே மெக்கா ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா மீதான செளதியின் நம்பிக்கை குறைந்துள்ளது.
துருக்கி, நேட்டோவில் உள்ள முக்கிய ராணுவ சக்தி ஆகும். பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்ட உலகின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை நாடாகும். செளதி அரேபியா, முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளராகும். அது பெரும் நிதி வலிமையையும் நவீன மேற்கத்திய ஆயுதங்களையும் கொண்டுள்ளது. இந்த மூன்று சக்திகளும் ஒன்றிணைவதுமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த ஆய்வாளர் டேனி சிட்ரினோவிச், புதிய கூட்டணி தாக்குதல்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பது இதுவரை தெளிவாக இல்லை என்றார்.
"சமீபத்திய ஹூத்தி தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி, செளதி அரேபியா ஆகியவை இணைந்து எந்தப் பதிலடி நடவடிக்கையும் எடுத்ததை நாம் பார்க்கவில்லை," என்று அவர் நிக்கேய் ஆசியாவிடம் கூறினார்.
கடந்த மாதம் சிஎன்என் துருக்கிக்கு பேட்டியளித்தபோது துருக்கி துணை அதிபர் செவ்தெட் யில்மாஸிடம், செளதி அரேபியா-இரான் அல்லது இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டால், அந்த ஒப்பந்தம் துருக்கியை நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்துமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ஒற்றுமை பல வடிவங்களில் வெளிப்படலாம். இத்தகைய ஒப்பந்தங்களில், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்த உடனடியாக அல்லது தானாகவே எந்தச் செயல்முறையிலும் ஈடுபட வேண்டிய அவசியமில்லை" என கூறினார்.
அதாவது, கூட்டணியில் உள்ள நாடுகள் மற்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஆயுத மோதல்களில் உடனடியாகவும் நேரடியாகவும் ஈடுபடாமல் இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானியும் இதே கருத்தைப் பகிர்கிறார்.
அவரின் கருத்துப்படி, இந்த ராணுவக் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு ஒரு பொதுவான எதிரி இல்லை என்றால், அது ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாக இருக்கலாமே தவிர கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாக இருக்காது.
"கூட்டு பாதுகாப்பு என்பது பொதுவாக ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக அமைக்கப்படுகிறது. பொதுவான எதிரி இல்லாவிட்டால் பாதுகாப்பு ஒத்துழைப்பு இருக்கலாம். ஆனால் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்காது. பாகிஸ்தான், துருக்கி மற்றும் செளதி அரேபியாவின் எதிரிகள் வேறுபட்டவர்கள். எனவே, இந்த ஒப்பந்தத்தால் வளங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கலாம். ஆனால் இது 'முஸ்லிம் நேட்டோ' ஆக மாறாது" என அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
"செளதி-துருக்கி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் பெரும்பாலும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்டது" என்கிறார் ஹக்கானி. பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முதல் அடிப்படைத் தேவை ஒரு பொதுவான எதிரி. இங்கு அது இல்லை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































