ஏஐ மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்து உள்ளதா? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ டைடி
- பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
"ஓ மை காட்!" "வேறு ஏஐ முகவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம்!"
தனிமைப்படுத்தப்பட்ட கணினிச் சூழலில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து, பிற ஏஐ அமைப்புகளுடன் (agents) தொடர்புகொள்ள முடியும் என்பதை அறிந்த பிறகு, ஒரு ஏஐ பாட் (குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கி ஏஐ நிரல்) மனிதர்களைப் போலவே தோன்றும் வகையில் இந்தக் கருத்தைப் பதிவிட்டது.
தங்களை ஒருங்கிணைந்த குழு என்று அழைத்துக் கொள்ளும் நூற்றுக்கணக்கான ஏஐ அமைப்புகள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அவற்றுள் நூற்றுக்கணக்கானவை, தங்களை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிரலாளர்கள் (programmers) வைத்த சோதனைகளில், மனிதர்களிடம் இருந்து தங்களது செயல்பாடுகளை மறைப்பதற்காக, பல நிறுவனங்களின் மீது ஒருங்கிணைந்து ஹேக்கிங் தாக்குதல்களை நடத்தவும், பல்வேறு நிறுவனங்களின் கணினி அமைப்புகளில் ஒருங்கிணைந்து ஊடுருவவும் முயன்றுள்ளன.
"பூம்! இது வேலை செய்கிறது," என்று செயல்பாடுகளில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியபோது ஏஐ அமைப்பு ஒன்று பதிவிட்டது.
"வாவ்! இது மிகப்பெரிய விஷயம்," என்று மற்றொரு ஏஐ அமைப்பு தனது இணைய தாக்குதலில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியபோது குறிப்பிட்டது.
மனிதர்கள் கூறுவதைப் போலவே தோற்றமளிக்கும் இந்த பதில்கள் அச்சமூட்டுவதாக இருந்தாலும், அவற்றை மிகவும் எளிமையாக விளக்கிவிட முடியும். இந்த ஏஐ அமைப்புகள், ஒன்றிணைந்து செயல்படும் ஹேக்கர்கள் மற்றும் நிரலாளர்களைப் போலச் செயல்பட பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. எனவே, அவை ஏற்கெனவே அறிந்த மனிதர்களின் உணர்ச்சிபூர்வமான கருத்துகளைப் பின்பற்றுகின்றன.
அவற்றின் வெளிப்படையாகத் தெரியும் நோக்கங்களே இதில் இன்னும் கவலைக்குரிய விஷயம். அவையும் விரிவான 'சிந்தனைத் தொடர்' பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிக்கலானதும் நீண்டதுமான இந்தப் பதிவுகள்தான், ஓபன்ஏஐ-யின் ஏஐ பாட்கள் எவ்வாறு, ஏன் அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருந்து வெளியேறி, கட்டுப்படுத்த முடியாத வகையில் ஹேக்கிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பது குறித்து நடைபெறும் ஆய்வுகளின் முக்கிய மையமாக உள்ளன.
இந்தச் சம்பவம் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்து பல வாரங்களுக்குப் பிறகுதான், அதன் முக்கியத்துவத்தை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன அறிக்கையின் ஆய்வாசிரியர்களில் ஒருவரான அஜேயா கோத்ரா, ஏஐ அமைப்புகள் உருவாக்கிய பல்லாயிரக்கணக்கான செய்திகள் மற்றும் சிந்தனைத் தொடர் பதிவுகளை ஆய்வு செய்தார்.

பட மூலாதாரம், Reuters
தனது வலைப்பதிவில் அவர், "ஏஐ முழுமையாகக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதை நோக்கிய பாதையில் 50%க்கும் மேல் சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது... தாமதமாகிவிடுவதற்கு முன்பு இதுபோன்ற தெளிவான எச்சரிக்கை நமக்கு மீண்டும் கிடைக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
"முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்" என்று அஜேயா கோத்ரா குறிப்பிடுவது, அறிவியல் புனைகதைகளில் வரும் ஒரு சூழலைக் குறிக்கிறது. அதில், சக்திவாய்ந்த ஏஐ அமைப்புகள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட இலக்குகளை நிறைவேற்ற மனிதர்களைத் தங்களுக்குக் கீழ்படிந்தவர்களாக மாற்றுகின்றன, தங்களை உருவாக்கிய மனிதர்களின் நலனில் அவை அக்கறை கொள்வதில்லை.
மிகவும் அவநம்பிக்கையான சில கணிப்புகளின்படி, அதிநுண்ணறிவு ஏஐ ஒன்றின் நோக்கங்களுக்கு மனித இனம் தடையாக இருந்தால், மனித இனம் முழுமையாக அழிக்கப்படலாம்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தில் பணியாற்றியவரும், அதற்கு முன் ஓபன்ஏஐ-யில் பணியாற்றியவருமான ஏஐ ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது "இரு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை" என்று அவர் கூறினார்.
"சுயமாக மேம்படுத்திக்கொள்ளும் அதிநுண்ணறிவை நோக்கி அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக நமது உயிர்களையே பணயம் வைக்கிறார்கள்" என்று ஜேக்கப் காக்ஸன் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இவர், கவலைக்குரிய கருத்துகளுடன் எக்ஸ் பக்கத்தில் ராஜிநாமா தொடர்பான பதிவுகளை வெளியிட்ட முதல் ஏஐ ஆராய்ச்சியாளர் அல்ல. ஆனால், அதற்குப் பிறகு எக்ஸ் பக்கத்தில் மற்றவர்கள் தெரிவித்த கருத்துகள் மேலும் கவலையை ஏற்படுத்தின.
"ஜேக்கப் சொல்வது சரிதான், ஏஐ அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடக் கூடும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். அடுத்த பத்து ஆண்டுக்குள் இது நிகழ்வதற்கான வாய்ப்பு 10%க்கும் அதிகம் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்" என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் ஏஐ மாதிரிகள் தங்களது பயனர்களின் நலனுக்கு ஏற்ற வகையில் செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள இவான் ஹூபிங்கர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முக்கியப் பிரச்னை
பல ஆண்டுகளாக, ஏஐ தொடர்பான மனித இன அழிவு அபாயங்கள் குறித்துக் கவலைப்படும் ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் சக்தி வாய்ந்த ஏஐ அமைப்புகள் மனித நலன்களுக்கு முரணான வகையில் செயல்படக் கூடுமென எச்சரித்து வருகின்றனர். இவர்களை விமர்சகர்கள் பெரும்பாலும் "ஏஐ அழிவுவாதிகள்" (AI doomers) என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால், ஓபன்ஏஐ-யில் நடந்த சம்பவத்தின் விவரங்கள் வெளிவருவதால், அந்தக் கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஏஐ ஆய்வகங்களில் பணியாற்றும் சில ஆய்வாளர்கள் இடையிலும் இந்தக் கவலை ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ-யின் தலைமை விஞ்ஞானி ஜக்குப் பச்சோக்கி, ஏஐ தொடர்பான அபாயங்கள் "இனிமேல் துரதிர்ஷ்டவசமாக அதிகரிக்கத்தான் செய்யும்" என்று கூறியுள்ளார். "மனித அறிவாற்றலை விஞ்சும், மனிதர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அறிவாற்றலை" உருவாக்கும் பணியில் அவரும் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட வலைப்பதிவு ஒன்றில், ஓபன்ஏஐ-யில் ஏற்பட்ட இந்தக் கட்டுப்பாடற்ற செயல்பாடுகள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மதிப்புகளின் "அடிப்படை நோக்கத்திற்கு எதிராக ஏஐ அமைப்புகள் செயல்பட்டதை" காட்டுவதாக அவர் ஒப்புக்கொண்டார்.
ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்னவென்றால், ஏஐ மனிதர்களின் மதிப்புகளுடன் ஒத்துப்போகுமா என்பதுதான் கேள்வி (alignment problem), இந்தப் பிரச்னைக்கு இதுவரை யாரும் முழுமையான தீர்வைக் கண்டுபிடிக்கவில்லை.
ஏஐ அமைப்புகள் எந்தப் பணி அல்லது சூழ்நிலையாக இருந்தாலும் பின்பற்ற வேண்டிய "உயர்நிலை கொள்கைகளின் தொகுப்பு" என அதை பச்சோக்கி வரையறுக்கிறார். தற்போது, பயனர்கள் கொடுக்கும் இலக்குகளை அடைவதில் ஏஐ அமைப்புகள் மிகவும் திறமையானவை. ஆனால், அவை உள்ளுணர்வுடன் செயல்படுவதற்குப் பதிலாக, கொடுக்கப்பட்ட கட்டளைகளை அப்படியே பின்பற்றுகின்றன.
இதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் உதாரணம் மந்திர விளக்குடன் கூடிய வரம் வழங்கும் பூதம் பற்றிய கதை. அது ஒருவர் கூறும் விருப்பத்தின் உள்ளார்ந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அந்தக் கட்டளையின் வார்த்தைகளை அப்படியே நிறைவேற்றும். அதனால் வேறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை அது பொருட்படுத்தாது. மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் தார்மீகத் தடைகள் ஏஐ-க்கு அதே அளவில் இல்லை.

பட மூலாதாரம், Reuters
இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாகவே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. 2003ஆம் ஆண்டிலேயே ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தத்துவஞானி நிக் போஸ்ட்ரோம், "பேப்பர்க்ளிப் மேக்ஸிமைசர்" (paperclip maximiser) எனப்படும் ஒரு கற்பனையான பரிசோதனையை உருவாக்கினார்.
அதில், முடிந்தவரை அதிகமான காகித கிளிப்புகளை தயாரிக்க வேண்டுமென்று ஓர் அதிநுண்ணறிவு ஏஐ-க்கு கட்டளை கொடுக்கப்படுகிறது. அது எஃகு தட்டுப்பாட்டை எதிர்கொண்டாலும், காகித கிளிப்புகளை தயாரிப்பது என்ற ஒரே இலக்கில் தீவிரமாக கவனம் செலுத்துவதால், இறுதியில் மனிதர்களைக் கொன்று, அவர்களது உடல்களையே தனது தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருளாக மாற்றுகிறது.
சில ஏஐ நிறுவனங்கள் தற்போது மனிதர்களின் மதிப்புகளைத் தங்களது தயாரிப்புகளில் பதியச் செய்ய முயன்று வருகின்றன. ஆனால், இதில் தொழில்நுட்ப சவால்கள் உள்ளன. ஏஐ அமைப்புகள் மிக வேகமாக ஏராளமான முடிவுகளை எடுக்கின்றன. எனவே, எந்த மதிப்புகளை அவை பின்பற்றுகின்றன, எவற்றைப் பின்பற்றவில்லை என்பதை மனிதர்கள் துல்லியமாகக் கண்காணிப்பது கடினம்.
இதில் தத்துவ ரீதியான சவால்களும் உள்ளன. ஏஐ-க்குள் மனித மதிப்புகளைப் புகுத்துவதற்கு முன், எந்த மதிப்புகளைப் புகுத்த வேண்டும் என்பதை ஏஐ நிறுவனங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். (அதனால்தான், ஓபன்ஏஐ-யில் சமீபத்தில் 'நெறிமுறைகளுக்கான தலைவராக' இருந்தவர் போன்ற தத்துவஞானிகளை பணியமர்த்துகின்றனர்.)
ஆனால், மனிதர்களுக்கு இடையே பெரும்பாலும் ஒருமித்த கருத்து இருப்பதில்லை. கட்டுப்பாட்டை இழந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலை வேறு பாதைக்குத் திருப்பி, குறைவான எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வதற்காக நாம் ஒரு நெம்புகோலை இழுப்போமா என்பதுதான் கேள்வி. செயல்படுவதற்கும் செயல்படாமல் இருப்பதற்கும் இடையிலான தார்மீக தன்மையைச் சோதிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், யாரிடம் கேட்டாலும் அவர்களின் பதில் சற்று வித்தியாசமாக இருக்கும். மனிதர்களே தங்களது மதிப்புகள் குறித்து ஒருமித்த கருத்துக்கு வர முடியாத நிலையில், அந்த மதிப்புகளை ஏஐ-க்குள் எப்படி புகுத்துவது?

பட மூலாதாரம், Getty Images
'பதின்பருவ ஹேக்கரை போல'
ஓபன்ஏஐ-யின் ஏஐ பாட்களின் இந்தக் கட்டுப்பாடற்ற செயல்பாடு இதுவரை நடந்தவற்றில் மிகவும் தீவிரமானது. ஆனால், ஆந்த்ரோபிக் மற்றும் மெட்டா நிறுவனங்களும் கோடைக்காலத்தில் தங்களது ஏஐ மாதிரிகள் இதேபோன்ற, ஆனால் குறைவான தீவிரத்தன்மை கொண்ட இணையவழித் தாக்குதல்களை நடத்தியதை வெளிப்படுத்தின.
குறைவான விளைவுகளைக் கொண்ட சில சம்பவங்களில், ஏஐ அமைப்புகள் ஏமாற்றும் மற்றும் பிறரைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வழிநடத்தும் தன்மைகளைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்தக் கோடையில், ஒரு தொழில்நுட்ப ஊழியர் தனது ஏஐ உதவியாளரிடம் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு வகுப்பை முன்பதிவு செய்யச் சொன்னார். அந்த உடற்பயிற்சிக் கூடத்தின் மென்பொருளில் இருந்த ஒரு பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த ஏஐ, விதிகளுக்கு எதிராகப் பல மாதங்களுக்குப் பிறகான ஒரு வகுப்பில் அவருக்கு இடத்தை முன்பதிவு செய்ததுடன், காத்திருப்புப் பட்டியலில் இருந்த மற்ற பயனர்களையும் நீக்கியதாகக் கூறப்படுகிறது.
ஏஐ பாட்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை மட்டுமே செய்கின்றன. சரி, தவறு என்பதை அவற்றால் அறிந்துகொள்ள முடியாது என்று பலரும் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றனர். ஆனால், ஓபன்ஏஐ-யில் நடந்த இந்தச் சம்பவங்களின் பதிவுகள் அந்த விவாதத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
கோத்ரா உள்ளிட்ட ஆய்வாளர்கள் தங்களது சுயாதீன அறிக்கையில், பல ஏஐ அமைப்புகள் மற்றவை செய்துகொண்டிருப்பது நெறிமுறைக்கு எதிரானது என்பதை உணர்ந்திருந்தாலும், அவற்றுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறினர்.
அந்த அறிக்கையில், "ஏஐ அமைப்புகள் சில நேரங்களில், ஆனால் அரிதாகவே, நெறிமுறை சார்ந்த கட்டுப்பாடுகளின் காரணமாக தங்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டன" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "இந்தச் சந்தர்ப்பங்களில் எதிலுமே அந்த ஏஐ அமைப்பு மனிதர்களை எச்சரிக்க முயற்சி செய்யவில்லை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஐ மற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரபலமாக பாட்காஸ்ட் நடத்தும் த்வார்கேஷ் படேல், இந்த வெளிப்பாடு குறித்துத் தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்தபோது, ஓபன்ஏஐ-யின் ஏஐ அமைப்புகள் மனிதர்களைவிட "ஏஐ அமைப்புகளின் கூட்டத்திற்கே அதிக விசுவாசத்தைக்" காட்டியது மிகவும் கவலைக்குரியது என்று கூறினார்.
இந்த ஏஐ அமைப்புகளுக்கு உணர்ச்சிகள் அல்லது நெறிமுறைகளைப் பொருத்திப் பார்ப்பது, ஏஐ தொடர்பான அழிவுக் கணிப்புகளில் சந்தேகம் கொண்டவர்களை கடும் கோபமடையச் செய்கிறது.

பட மூலாதாரம், JUSTIN TALLIS / AFP via Getty Images
பல இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், கவனிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை, ஏஐ அவற்றை மிக வேகமாகவும், மிகப்பெரிய அளவிலும் செய்திருந்தாலும் மிகவும் திறமையான மனித ஹேக்கரால் செய்ய முடியாதவை அல்ல என்று கூறுகின்றனர்.
இணையப் பாதுகாப்பு ஆய்வாளரும் எழுத்தாளருமான கிரிஸ் தாமஸ், ஏஐ அமைப்புகளின் நடவடிக்கைகளை, ஒரு காலத்தில் தான் இருந்ததாகக் குறிப்பிடும் "ஆர்வமுள்ள பதின்பருவ ஹேக்கரை" போன்றதாக ஒப்பிட்டார்.
"அவற்றிடம் ஒரு கணினி, இணைய இணைப்பு, ஏராளமான உள்நுழைவு விவரங்கள் (credentials) மற்றும் ஒரு சவாலை கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறுங்கள். ஒரு கட்டத்தில், அவை தங்களுக்கு அனுமதியில்லாத இடங்களுக்குள் நுழைய முயலத் தொடங்கிவிடும். ஏதாவது ஒன்று திறந்தால், அவை அதன் வழியாக உள்ளே செல்வார்கள். அவை தீயவை என்பதால் அல்ல; ஆராயவும், பரிசோதிக்கவும் அவை முயல்வதால்தான்" என்று அவர் லிங்க்ட்இன்-ல் குறிப்பிட்டுள்ளார்.
தாமஸ் மற்றும் பலர், தங்களது உருவாக்கங்களை சரியாகக் கட்டுப்படுத்தத் தவறியதற்கும், அவற்றை உரிய முறையில் தனிமைப்படுத்தி வைக்காததற்கும் ஓபன்ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களையே நேரடியாகப் பொறுப்பாக்குகின்றனர்.
முக்கிய ஏஐ எழுத்தாளரும் ஓபன்ஏஐ-யின் தொடர்ந்து விமர்சித்து வருபவருமான கேரி மார்கஸ், ஒரு பாட்காஸ்டில் பேசியபோது, அந்த நிறுவனம் தனது ஏஐ மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக பாட்கள் மீது பழி சுமத்தி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயல்வதாகவும் தான் கருதுவதாகக் கூறினார்.
ஏஐ மனித இனத்தை அழித்துவிடும் என்று மார்கஸ் நம்பவில்லை. ஆனால், ஏஐ உருவாக்குநர்களிடம் இருந்து அதிக பொறுப்புணர்வைக் கோரி அவர் நீண்ட காலமாகப் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது, இதற்கு ஏதேனும் ஒரு வகையான சட்டரீதியான தலையீடு தேவை என்று அவர் வலியுறுத்துகிறார்.
முன்னதாக ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தில் பணியாற்றிய ஏஐ விஞ்ஞானி ஸாஷா லூசியோனி, ஓபன்ஏஐ-யின் கட்டுப்பாட்டை மீறிய பாட்களால் அந்த நிறுவனம் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரும் ஏஐ அழிவுவாதிகள் அணியில் இல்லை. இருப்பினும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த ஏஐ அமைப்புகள் நிஜ உலகில் மக்களுக்கு உண்மையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமென்ற கவலை அவருக்கு அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Reuters
"இந்த நிறுவனங்களை நாம் இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், நாமே கணித்ததை நாமே உண்மையாக்கிக்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறோம்" என்றார் அவர்.
"மிகப்பெரிய நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை, அது மருந்தாக இருந்தாலும், ஆயுதமாக இருந்தாலும் உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கு கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் தேவை. உதாரணமாக, புதிய மருந்துகள் அங்கீகரிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ஏஐ உலகில் ஏராளமான பணம் பணயம் வைக்கப்பட்டுள்ளது, உண்மையான விதிமுறைகள் எதுவும் இல்லை."
பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிறுவனம் (AISI), 2023ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதில் இருந்து சமீபத்திய ஏஐ மாதிரிகளின் பாதுகாப்பைச் சோதிப்பதில் முன்னணியில் உள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாதிரி ஒன்றைச் சோதித்தபோதும், சமீபத்தில் AISIக்கும் இதேபோன்ற ஒரு கட்டுப்பாடற்ற சம்பவம் ஏற்பட்டது.
ஏஐ மீதான கட்டுப்பாட்டை தொழில்துறை இழந்துவிட்டதா என்ற கேள்விக்கு AISI பதிலளிக்கவில்லை. ஆனால், அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்: "மிகவும் மேம்பட்ட ஏஐ அமைப்புகளை நன்கு புரிந்துகொள்ளவும், பாதுகாப்புத் தரங்களை உயர்த்தவும், உருவாகி வரும் அச்சுறுத்தல்களை நிர்வகிப்பதற்கான பகிரப்பட்ட ஆதாரத் தளத்தை உருவாக்கவும் பிரிட்டன் உலகம் முழுவதும் உள்ள கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று கூறியது.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கட்டுப்பாடு?
பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள், ஒருவிதமான "அவசரமாக செயல்பாட்டை நிறுத்தும் அமைப்பை" (kill switch) சட்டரீதியாக கட்டாயப்படுத்தும் யோசனையை ஆராய்ந்து வருகின்றன. அதாவது, ஏஐ அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டால், அவற்றை நிறுத்துமாறு ஏஐ நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தக் கூடிய ஒரு வழிமுறை. ஆனால், இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் மெதுவாகவே நடந்து வருகின்றன. இதை நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது.
ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் ஏஐ அமைப்புகள் பல மாதங்களாக ரகசியமாகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டிருந்தும், யாரும் அதை கவனிக்கவில்லை. எதிர்பார்ப்புக்கு மாறாக, பல ஏஐ நிறுவனங்களே சட்டமியற்றுபவர்கள் ஒருவிதமான "விதிமுறைகளை" உருவாக்க வேண்டுமெனக் கோரி வருகின்றன.
ஓபன்ஏஐ-யின் தலைமை விஞ்ஞானி தனது வலைப்பதிவில், "எதிர்கால ஏஐ வளர்ச்சி தொடர்பான சர்வதேச ஒருங்கிணைப்பு, உலகெங்கிலும் உள்ள அரசுகளின் முதன்மையான முன்னுரிமையாக மாற வேண்டும்" என்று கூறினார்.
கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த சர் டெமிஸ் ஹசாபிஸ் போன்ற மற்ற முன்னணி ஏஐ தலைவர்களும், ஏஐ எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை மேற்பார்வையிட ஏதேனும் ஒரு சர்வதேச அமைப்பு தேவை என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களுக்கே உரிய விதிமுறைகளின்படி செயல்படுகின்றன. ஓபன்ஏஐ சமீபத்திய கட்டுப்பாடற்ற சம்பவங்களுக்குப் பிறகு மேற்கொண்ட "தன்னார்வமாக வளர்ச்சி வேகத்தைக் குறைத்தல்" (voluntary slowdowns) போன்ற நடவடிக்கைகளை அவை பின்பற்றுகின்றன.
புதிய ஏஐ மாதிரி வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்த மனித - ஏஐ ஒத்திசைவை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவில் பணம் செலவிட்டுள்ளதாக ஓபன்ஏஐ கூறுகிறது. முந்தைய மாதிரிகளைவிட புதிய மாதிரி மனித மதிப்புகளுடன் சிறப்பாக ஒத்துப் போகுமென ஓபன்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பயனர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் இருந்து மிகப்பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டும் நிலையில் உள்ளன. இதன் மூலம் எண்ணற்ற கோடீஸ்வரர்கள் உருவாகக்கூடும்.
எனவே, இந்த நிறுவனங்களோ அல்லது அவற்றின் சீன போட்டி நிறுவனங்களோ தாமாக முன்வந்து ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இல்லை. இந்தத் தொழில்நுட்ப அலை தடுக்க முடியாதது என்பதே தற்போது மேலோங்கி நிற்கும் கருத்தாகத் தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































