'கைகளை அழுக்காக்கி கொண்டால் சில வாரங்களில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்' - புதிய ஆய்வு முடிவு

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பெக்கா வார்னர்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மண்ணில் கைகளைப் புதைப்பதும், புல், மரங்கள் அல்லது பாசியைத் தொடுவதும் நமது தோலுக்கும், உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கின்றன.

நான் தினமும், ஏறக்குறைய ஒரு தவறாத வழக்கம்போல், எனக்கு அருகிலுள்ள பூங்காவில் நீண்ட நடைபயிற்சி மேற்கொள்கிறேன். அங்கு பார்ப்பதற்குப் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. வசந்த காலத்தில் மணம் வீசும் மலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். உற்சாகமான பறவைகளின் கீச்சொலியும் காற்றில் நிறைந்திருக்கும். ஆனால் பொதுவாக எனது புலனுணர்வு அனுபவம் அத்துடன் முடிந்துவிடுகிறது. என் காலணிகள் எவ்வளவு சேறானாலும், பெரும்பாலும் நான் சுத்தமான கைகளுடனேயே வீட்டிற்குத் திரும்புகிறேன்.

ஆனால் ஆய்வுகள் வேறொன்றைக் கூறுகின்றன. நான் வழக்கமாகக் கடந்து செல்லும் மரங்கள், புதர்கள் மற்றும் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில் பலன்கள் இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

பின்லாந்து சுற்றுச்சூழல் நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் மற்றும் இயற்கை-உடல்நல ஆராய்ச்சியாளரான மீரா க்ரோன்ரூஸ், ஒரு பரிசோதனையின் பகுதியாக, சிலரிடம் மண், பாசி ஆகியவற்றை 20 விநாடிகள் கைகளில் தேய்க்கச் சொன்னார். அதன் பிறகு அவர்கள் குழாய்த் தண்ணீரில் கைகளைக் கழுவிய பின்னரும், அவர்களது தோலில் இருந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் பல்வகைத் தன்மையும் அதிகரித்திருப்பதை அவர் கண்டறிந்தார். "வெறும் கண்களுக்கு அவர்களுடைய கைகள் சுத்தமாகவே தெரிந்தன. ஆனால் ஏற்பட்ட மாற்றம் மிகப் பெரியதாக இருந்தது."

தோலில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பது கவர்ச்சிகரமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இணைந்து வாழும்போது, அவை ஒன்றையொன்று கட்டுப்படுத்துவதோடு, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமி பாக்டீரியாக்களிடம் இருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன. மண் மற்றும் தாவரங்கள் போன்ற இயற்கைப் பொருட்களுடன் தொடர்பு கொள்வது, நமது தோலிலுள்ள நுண்ணுயிரிகளின் பல்வகைத் தன்மையை அதிகரிப்பதற்கான எளிய வழி என்றும், அது நமது தோலுக்கு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நன்மை அளிப்பதாகவும் வளர்ந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், BBC/Serenity Strull

இருபது விநாடிகள் என்பது நீண்ட நேரமல்ல. நடைபயிற்சியின்போது ஒரு மரப்பட்டையைத் தொட்டுப் பார்ப்பதற்கோ அல்லது புல்வெளியில் அமர்வதற்கோ நான் விரும்பியே நேரம் ஒதுக்குவேன். ஆனால் அதைவிட அதிக நேரம் தொடர்பில் இருப்பது இன்னும் சிறந்தது என்று க்ரோன்ரூஸ் கூறுகிறார்.

ஏனெனில் அவரது பரிசோதனையில், "தோலிலுள்ள நுண்ணுயிரிகளின் அமைப்பு மிக விரைவாக முந்தைய நிலைக்கே திரும்பிவிட்டது." எனவே, இயற்கையுடன் நீண்ட நேரம் அல்லது அடிக்கடி தோல் தொடர்பு வைத்திருப்பது, நமது தோலிலும் உடலுக்குள்ளும் நடைபெறும் உயிரியல் செயல்பாடுகளைக் கணிசமாக மாற்றக்கூடும் என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சேற்றில் விளையாடுவது நல்லதா?

மத்திய பின்லாந்தில் உள்ள ஆரிங்கொலின்னா (Aurinkolinna) குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், சேறு படிந்த கைகள் என்பது மிகவும் இயல்பான காட்சி. அங்குள்ள குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது மரங்கள் நிறைந்த வெளிப்புற விளையாட்டு மைதானத்தில் விளையாடுகிறார்கள்.

அவர்கள் புதர்களுக்கும் மரங்களுக்கும் இடையில் ஓடுகிறார்கள், கயிறுகளில் ஏறுகிறார்கள், மணல் கோட்டைகள் கட்டுகிறார்கள், மழைநீர்த் தேக்கங்களில் துள்ளி விளையாடுகிறார்கள், மேலும் மண் மற்றும் மரத்துண்டுச் சில்லுகளைக் கைநிறைய அள்ளுகிறார்கள். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர்கள் தலை முதல் கால் வரை சேறு படிந்திருப்பார்கள்.

இது அவர்களின் உடல்நலத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தைகளின் தோல், உமிழ்நீர் மற்றும் மலத்திலுள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்வதோடு, அவர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் மற்றும் முடி மாதிரிகளையும் பகுப்பாய்வு செய்து, அவர்கள் தினமும் விளையாடும் இடங்களில் இயற்கைச் சூழல் கொண்டு வரப்படும்போது, மூன்று ஆண்டுகளில் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆரிங்கொலின்னா, பின்லாந்தில் நடைபெற்று வரும் 'வஹ்விஸ்டு' (Vahvistu) ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுள்ள 43 குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ஒன்று. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் விஞ்ஞானி மார்ஜா ரோஸ்லண்ட் தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுக்கால ஆய்வின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

கடந்த 2016-17 காலகட்டத்தில், அவர் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் விளையாட்டு முற்றத்திற்குள் ஒரு காட்டுத் தரைப் பகுதியையே கொண்டு வந்தார். அதில் பீட் மண்ணும், செடிகள் வளர்க்கும் பெட்டிகளும் இடம்பெற்றிருந்தன. அங்கு 28 நாட்கள் தொடர்ந்து விளையாடிய பிறகும், மேலும் ஓராண்டு கழித்தும், சிறுவர்களின் தோல், உமிழ்நீர் மற்றும் குடலில் வாழும் பாக்டீரியாக்களில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் அளவிட்டார். நிலத்தில் பதிக்கப்பட்ட தரைகொண்ட முற்றத்தில் விளையாடிய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, அந்த காட்டுத் தரையில் விளையாடிய குழந்தைகளின் தோலில் ஓராண்டுக்குப் பிறகும் அதிகமான நுண்ணுயிரிப் பல்வகைத் தன்மை காணப்பட்டது.

"இந்தப் பல்வகைத் தன்மை நமது தோலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தோலில் வாழும் பாக்டீரியாக்களின் பல்வகைத் தன்மையை அதிகரிப்பது, நோய்களை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க உதவும். இதனால், நுண்ணுயிரிகள் வாழும் சூழல் சமநிலையில் இருக்கும். நோய் சர்வாதிகாரியைப் போன்றது, ஆரோக்கியமான தோல் ஜனநாயகத்தைப் போன்றது" என்று ரோஸ்லண்ட் கூறுகிறார்.

காட்டுத் தரையில் விளையாடிய குழந்தைகளின் தோலில், நோய்களை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை ரோஸ்லண்டின் ஆய்வு கண்டறிந்தது. இதற்குக் காரணம், மற்ற நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் பல்வகைத் தன்மையும் அதிகரித்து, இந்த 'தீய' பாக்டீரியாக்கள் வளர்வதற்கான இடத்தைக் குறைப்பதாக இருக்கலாம்.

அவரது கூற்றுப்படி, "மற்ற எல்லா வகையான நுண்ணுயிரிகளும் அதிக அளவில் இருப்பதால், நோய்க் கிருமிகளுக்கு இடம் குறைந்துவிடுகிறது."

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கியமான தோல், ஆரோக்கியமான உடல்

நமது தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, அதைவிடப் பல ஆழமான நன்மைகளையும் அளிக்கிறது. தோலின் ஆரோக்கியம், ஹார்மோன் செயல்பாடுகள், இதய மற்றும் ரத்த நாள நோய்கள், மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும். குறிப்பாக, பல்வேறு வகையான பாக்டீரியாக்களுடன் நமது தோல் தொடர்பு கொள்வது, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதை ஆய்வுகள் தற்போது காட்டத் தொடங்கியுள்ளன.

மார்ஜா ரோஸ்லண்ட், குழு இளம் குழந்தைகள் அடங்கிய குழு ஒன்றை நுண்ணுயிர்கள் செழுமையாக உள்ள மண்ணால் வளப்படுத்தப்பட்ட மணல் தொட்டியில் விளையாடச் செய்தார். மற்றொரு குழுவினர் அதேபோலத் தோற்றமளித்தாலும், குறைவான நுண்ணுயிர் பல்வகைத் தன்மை கொண்ட மணல் தொட்டியில் விளையாடினர்.

எதிர்பார்த்ததுபோல, நுண்ணுயிர்கள் நிறைந்த மணல் தொட்டியில் விளையாடிய குழந்தைகளின் தோலில் சில வகை பாக்டீரியாக்களின் பல்வகைத் தன்மை அதிகரித்தது. அதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய ரத்த மாதிரிகளில் உள்ள 'சைட்டோகைன்கள்' (cytokines) எனப்படும் நோய் எதிர்ப்புக் குறியீடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவை, நோய் எதிர்ப்பு மண்டலம் அளவு மீறிச் செயல்படாமல், வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட உதவும் 'நோய் எதிர்ப்புக் கட்டுப்பாட்டு' (immunoregulation) திறனை ஆதரிக்கின்றன.

இத்தகைய முடிவுகளே 'வஹ்விஸ்டு' (Vahvistu) ஆய்வுத் திட்டத்திற்கு ஊக்கமளித்தன. ஆரிங்கொலின்னாவில், அரசின் நிதி உதவியுடன் விளையாட்டு முற்றம் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது அங்கு சரளைக் கற்களுக்குப் பதிலாக மரத்துண்டுச் சில்லுகள் பரப்பப்பட்டுள்ளன. மேலும், பெரிய மணல் விளையாட்டுப் பகுதி, மரத்தால் செய்யப்பட்ட நடைபாதைகள் மற்றும் ஏற்கெனவே இருந்த பிர்ச், பைன் மரங்களும் உள்ளன.

வஹ்விஸ்டு திட்டத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சி, 'உயிரியல் பல்வகைத் தன்மைக் கருதுகோளை' (biodiversity hypothesis) ஆதரிக்கிறது. அதாவது, பல்வேறு நுண்ணுயிர்கள் நிறைந்த காற்று, தாவரங்கள், மண் ஆகியவை மனித உடலின் நுண்ணுயிர்ச் சூழலில் (microbiome) முக்கியத் தாக்கம் செலுத்துகின்றன. அதன் மூலம் நமது உடல்நலத்திலும் தாக்கம் செலுத்துகின்றன.

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், BBC/Serenity Strull

சுற்றுச்சூழலில் உயிரியல் பல்வகைத் தன்மை குறைந்து வருவதே, தற்போது அதிகரித்து வரும் நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகளுக்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது. ரோஸ்லண்டின் ஆய்வு, அது எவ்வாறு, ஏன் நிகழ்கிறது என்பதை விளக்க உதவக்கூடும்.

அவரது ஆய்வில், 'காம்மா புரோட்டியோபாக்டீரியா' (Gammaproteobacteria) எனப்படும் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா குடும்பம் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது தெரிய வந்தது. காட்டுத் தரை அமைப்பு கொண்ட முற்றத்தில் விளையாடிய குழந்தைகளின் தோலில், இந்த காம்மா புரோட்டியோபாக்டீரியாக்களின் பல்வகைத் தன்மை அதிகரித்திருந்தது.

இந்த அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்திருக்க உதவும் 'ஒழுங்குமுறை டி செல்கள்' (regulatory T cells) எனப்படும் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகமாக இருந்ததுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது. தன்னைத் தானே தாக்கும் நோய்கள் (autoimmune diseases) உருவாகாமல் தடுப்பதில் இந்த செல்கள் முக்கியமானவை என்று அவர் கூறுகிறார்.

தற்போதைக்கு, இதன் பொருள் எக்சிமா, ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு என்ன என்பதைத் துல்லியமாகக் கூற முடியவில்லை. "உதாரணமாக, நீங்கள் இயற்கையுடன் தொடர்பில் இருந்தால் ஆஸ்துமா வராது என்று இப்போது நாங்கள் கூற முடியாது. ஆனால் இதுபோன்ற நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பை அது குறைக்கக்கூடும் எனத் தோன்றுகிறது," என்று க்ரோன்ரூஸ் கூறுகிறார்.

பசுமையுடன் கைகோர்த்தல்

இந்த ஆரோக்கிய நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமானது இல்லை. ஓர் ஆய்வில், பெரியவர்கள் குளிர்காலத்தில் வீட்டுக்குள் காய்கறிகளை வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். சிலர் நுண்ணுயிர் பல்வகைத் தன்மை நிறைந்த மண்ணைப் பயன்படுத்தினர், மற்றவர்கள், அதேபோலத் தோற்றமளித்தாலும் நுண்ணுயிர் பல்வகைத் தன்மை குறைவாக இருந்த மண்ணைப் பயன்படுத்தினர்.

அவர்கள் ஒரு மாத காலம் தினமும் தாவரங்களைப் பராமரித்ததோடு, விளைந்த பயிர்களையும் சாப்பிட்டனர். நுண்ணுயிர்ச் செழுமை கொண்ட மண்ணைப் பயன்படுத்தியவர்களின் தோலில் வாழும் பாக்டீரியாக்களின் பல்வகைத் தன்மை அதிகரித்திருந்தது. அதோடு, அவர்களுடைய ரத்தத்தில் அழற்சியைக் குறைக்கும் (anti-inflammatory) சைட்டோகைன்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டாவது குழுவில் இருந்தவர்களிடம் இத்தகைய மாற்றங்கள் காணப்படவில்லை.

'குழந்தைகள் சேற்றில் விளையாடினால் ஆரோக்கியம் மேம்படும்' - பெற்றோரை வியக்க வைக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

இந்த வகையான தோட்டப் பணி, "இயற்கையுடன் எளிதாகத் தொடர்பு கொள்வதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்படிப்பட்ட தொடர்பு உண்மையிலேயே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது" என்று க்ரோன்ரூஸ் கூறுகிறார்.

மற்றுமோர் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் பின்லாந்திலுள்ள அலுவலகங்களில் உயிருள்ள தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட "பசுமைச் சுவர்களை" (green walls) அமைத்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு பணியாளர்களிடம் ஏற்பட்ட விளைவுகளை மதிப்பிட்டனர். அவர்களுடைய தோலில் வாழும் நுண்ணுயிரிகளின் பல்வகைத் தன்மை அதிகரித்து இருந்ததோடு, ரத்தத்தில் அழற்சியைத் தூண்டும் (pro-inflammatory) சைட்டோகைன்களின் அளவும் குறைந்திருந்தது. மேலும், தோல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான 'லாக்டோபாசில்லஸ்' (Lactobacillus) நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அவர்களின் தோலில் அதிகரித்திருந்தது.

க்ரோன்ரூஸ் தனது சொந்தக் குடும்ப வாழ்க்கையிலும் இந்தக் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்துகிறார். "என் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போது, அவர்கள் மரக் கூம்புகளையோ குச்சிகளையோ எடுக்க விரும்பினால், நான் 'வேண்டாம்' எனத் தடுப்பதில்லை. அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாட அனுமதிக்கிறேன்" என்றார் அவர்.

இந்த அணுகுமுறையை நமது நகரங்களிலும் பயன்படுத்தத் தொடங்க வேண்டுமென்று க்ரோன்ரூஸ் வலியுறுத்துகிறார்.

"மக்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் நகரங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அந்தத் தொடர்பில் சில, திட்டமிடப்படாமல் தாமாகத் தோன்றியவையாகவும் இருக்க வேண்டும். இயற்கையுடன் தொடர்பு கொள்வதற்காக மக்கள் தனியாக முடிவெடுத்து ஓரிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கக் கூடாது. வேலைக்கோ பள்ளிக்கோ செல்லும் வழியிலேயே அவர்கள் இயற்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"இயற்கையுடன் தொடர்பு கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து அறிவியல் இன்னும் பலவற்றைக் கண்டறிய வேண்டியுள்ளது. இருப்பினும், இதுவரை கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளே அழுக்கான கைகளையும் சேறு படிந்த கம்பளத்தையும் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையாக ஆக்குகின்றன. இதில் ஆபத்து மிகவும் குறைவு. வெளிப்படையான பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி பல சாத்தியமான நன்மைகள் உள்ளன" என்று க்ரோன்ரூஸ் கருதுகிறார்.

இந்தக் கண்டுபிடிப்புகள், பாசி படர்ந்த அந்த மரத்தைத் தொட்டுப் பார்க்கவும், புல்வெளியில் அமரவும், கொஞ்சம் சேறு படிவதைக் கண்டு அஞ்சாமல் இருக்கவும் நம் அனைவருக்கும் நினைவூட்டுவதாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு