புதினின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் மெய்க்காவல் படையினர்

காணொளிக் குறிப்பு, புதினைச் சுற்றி இத்தனை பாதுகாப்பா?
புதினின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் மெய்க்காவல் படையினர்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருக்கிறார்.

புதின் இந்தியா வரும்போதெல்லாம் பேசப்படும் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது...

அவரது பாதுகாப்பு. புதினின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் அவருடன் இருக்கின்றனர்.

ரஷ்யாவில் அதிபரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்காகவே தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு உள்ளது. அது எஸ்பிபி (SBP), அதாவது ரஷ்ய அதிபரின் பாதுகாப்புப் பிரிவு.

புதின் வெளிநாடு செல்லும்போதும் இந்தப் பாதுகாப்பு பல அடுக்குகளாக இருக்கும். முதல் அடுக்கில் அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள். இரண்டாவது அடுக்கில் பொதுமக்களின் கவனத்துக்குத் தெரியாமல் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள். மூன்றாவது அடுக்கு கூட்டத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். நான்காவது அடுக்கில், சுற்றியுள்ள கட்டடங்களின் கூரைகளில் துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பார்கள்.

இது மட்டுமல்ல... புதினின் பாதுகாப்புக்கு ரஷ்ய தேசியப் பாதுகாப்புப் படையான Rosgvardiaரோஸ்க்வார்டியாவும் (Rosgvardia) உதவுகிறது. அதன் தலைவர் விக்டர் சோலோடோவ், புதினின் முன்னாள் பாதுகாவலர். இந்தப் படை ரஷ்ய ராணுவத்திலிருந்து தனியானது என்றாலும், புதினுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அவரைப் பாதுகாப்பது அதன் முக்கியப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புதினின் உணவுக்கும் கடுமையான பாதுகாப்பு உள்ளது. அவரது உணவு ரகசியமாகத் தயாரிக்கப்படுகிறது. விஷம் வைக்கப்படலாம் என்ற அச்சத்தால், அவர் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் பரிசோதிக்க தனிப்பட்ட உணவு சுவைப்பவர் ஒருவர் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், புதின் பயன்படுத்தும் உணவு மற்றும் பானங்களை அவரது குழுவினரே எடுத்துச் செல்கின்றனர்.

மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்... புதின் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில்லை. இதை அவரே நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார். கிரெம்ளினுக்குள் ஸ்மார்ட்போன்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

இணையத்தைப் பாதுகாப்பானதாக அவர் கருதவில்லை என்றும், முக்கியமான தகவல்களை தனது ஆலோசகர்கள் வழங்கும் காகிதக் கோப்புகள் மூலம் அவர் பெறுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவரது பாதுகாப்பு பிரிவு குறித்து விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு