பாகிஸ்தானின் புதிய 'ஹங்கோர்' நீர்மூழ்கிக் கப்பல் எவ்வளவு சக்தி வாய்ந்தது?

பட மூலாதாரம், Pakistan Navy
- எழுதியவர், முன்ஸா அன்வர்
- பதவி, செய்தியாளர், பிபிசி உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பாகிஸ்தான் கடற்படையின் முதல் ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. இது ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மட்டுமல்ல, பாகிஸ்தான் கடற்படை வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த ஒரு பெயரின் மீள்வருகையும் கூட.
'ஹங்கோர்' என்பது ஒரு வகை சுறா மீன். அது மிக அமைதியாகத் தனது இரையைப் பின்தொடர்ந்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, திடீரெனத் தாக்கும் இயல்புடையது.
இப்போது, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரைக் கொண்ட 'புதிய மற்றும் நவீன' நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் படையில் இணைந்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட 'பிஎன்எஸ்எம் ஹங்கோர்' நீர்மூழ்கிக் கப்பலில், புதிய சென்சார்கள், மேம்பட்ட போர் அமைப்புகள், வெளிக்காற்று சாராத உந்துவிசை அமைப்பு (AIP) மற்றும் சிறந்த மறைந்திருந்து தாக்கும் அம்சங்கள் உள்ளன.
பாகிஸ்தானின் மிகப்பெரிய கடற்படைப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் கீழ், வரும் ஆண்டுகளில் மொத்தம் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும்.
ஆனால், ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் அப்படி என்ன சிறப்பு உள்ளது? பாகிஸ்தானுக்கு ஏன் இவை தேவைப்பட்டன? இது குறித்து வல்லுநர்களிடம் பிபிசி உருது பேசியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம்

பட மூலாதாரம், Pakistan Navy
வல்லுநர்களின் கூற்றுப்படி, பாகிஸ்தான் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் சேவையானது, 1960-களில் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட 'டென்ச்' ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் அஸ்திவாரம் இடப்பட்டது.
அதன்பிறகு, பிரான்ஸிடமிருந்து 'டாஃப்னி' மற்றும் 'அகஸ்டா' ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்பட்டன.
'அகஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானிலேயே இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டன. இந்த அனுபவமே பிற்காலத்தில் 'ஹங்கோர்' ரக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான அடிக்கல், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது நாட்டப்பட்டது.
2015 ஏப்ரல் மாதம், 8 ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் ஷி ஜின்பிங் கையெழுத்திட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், மற்ற நான்கு கராச்சியிலும் கட்டப்பட்டு வருகின்றன.
ஹங்கோர் ரகத்தில் புதியது என்ன?

பட மூலாதாரம், Pakistan Navy
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு, சீனாவின் நவீன 039பி யுவான் ரக நீர்மூழ்கிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மேம்பட்ட ரேடார், சோனார், மின்னணு அமைப்புகள் மற்றும் ஆப்ட்ரானிக் ஸ்கோப்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடல் மேற்பரப்பிலும், நீருக்கடியிலும் சிறந்த கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள உதவும்.
ஆயுதங்களைப் பொறுத்தவரை, ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக எடையுள்ள டர்பிடோக்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தும் திறன் கொண்டவை.
பாகிஸ்தான் கடற்படையின் கூற்றுப்படி, "ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் பங்கு ஆயுதங்களை ஏந்துவதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை, மாறாக ஒரு விரிவான மூலோபாய இலக்கை அடைவதிலும் இவை துணைபுரிகின்றன."
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கியமாக மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன:
- கடல் வழித்தடங்களை எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக மாற்றுதல்
- எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல்
- உளவுத் தகவல்களைத் திரட்டுதல்
இதன் காரணமாகவே, நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக முக்கியமான மூலோபாய ஆயுதமாகக் கருதப்படுகின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் மிக முக்கியமான அம்சம் அதன் 'வெளிக்காற்று சாராத உந்துவிசை அமைப்பு' (AIP) தொழில்நுட்பமாகும்.
வழக்கமான டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களது பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய அவ்வப்போது கடல் மேற்பரப்பிற்கு வர வேண்டியிருக்கும். ஆனால், ஏஐபி (AIP) நீர்மூழ்கிக் கப்பல்களால் நீண்ட காலம் நீருக்கடியிலேயே இருக்க முடியும்.
இந்த சிறப்பம்சத்தின் காரணமாக, இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட காலம் யாருடைய கண்ணிலும் படாமல் தங்கள் பணிகளைத் தொடர முடியும்.
இருப்பினும், இதன் உண்மையான பலம் ஏஐபி தொழில்நுட்பத்தில் அல்லது அதன் அமைதியான செயல்பாட்டில் மட்டும் இல்லை; இந்த இரண்டின் ஒருங்கிணைப்பில்தான் உள்ளது. அதாவது, ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல் எதிரிகளின் பார்வையில் படாமல், நீண்ட காலம் கடலுக்கு அடியில் இருக்க முடியும். 'மறைந்திருந்து தாக்கும்' மற்றும் 'நீண்ட காலம் நிலைத்திருக்கும்' இந்தத் திறனே, இதனை உண்மையாகவே அதிக செயல்திறன் கொண்டதாக மாற்றுகிறது.
'மிகப்பெரிய வித்தியாசம் இதன் உந்துவிசை அமைப்புதான்'

பட மூலாதாரம், Pakistan Navy
1971-ஆம் ஆண்டு போரின்போது, பாகிஸ்தான் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான 'காஸி' (Ghazi)-யில் பணியில் இருந்தவர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் அகமது தஸ்னிம்.
பிபிசி உருது சேவையிடம் பேசிய அவர், "இதன் மிகப்பெரிய வித்தியாசம் வெளிக்காற்று சாராத உந்துவிசை அமைப்பு (AIP)தான். இது நீர்மூழ்கிக் கப்பல் நீண்ட நேரம் நீருக்கடியில் மறைந்திருக்க அனுமதிக்கிறது. இதுவே இதன் உண்மையான பலம்," என்று குறிப்பிட்டார்.
அகமது தஸ்னிமின் கூற்றுப்படி, அவர் பணியில் இருந்த காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல்கள் பேட்டரியை சார்ஜ் செய்ய அடிக்கடி கடல் மேற்பரப்பிற்கு அருகில் வர வேண்டியிருந்தது. ஆனால், புதிய ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியத்தை மிகக் குறைவாகவே கொண்டுள்ளன.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "முன்பு நாங்கள் டார்பிடோக்களையும், பிற்காலத்தில் ஹார்பூன் ஏவுகணைகளையும் பயன்படுத்தினோம். இப்போது எங்களிடம் அதிக நவீனமான மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஆயுதங்கள் உள்ளன. அவற்றின் போர்முனைகள் மாறுபட்டவை. சென்சார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சத்தமும் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக, இது முன்பை விடச் சிறந்த மற்றும் அதிக செயல்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்" என்றார்.
ஏஐபி அமைப்பு குறித்துப் பேசிய பாகிஸ்தான் கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் சையத் முகமது ஒபைதுல்லா, "இது எங்களின் தற்போதைய மற்றும் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு அதிகரிக்கும்," என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, பாகிஸ்தான் கடற்படையின் சில நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்கனவே ஏஐபி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு 8 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏன் தேவை?

பட மூலாதாரம், Pakistan Navy
பாகிஸ்தானுக்கு புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏன் தேவைப்பட்டன? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் அகமது தஸ்னிம், "அடிப்படையாகச் சொன்னால், இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பழைய கப்பல்களுக்கு மாற்றாக அமையும்" என்கிறார்.
அவரது கூற்றுப்படி, பழைய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமையானவை. 1960 மற்றும் 1970-களில் பயன்படுத்தப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களின் செயல்பாட்டுக் காலத்தை நிறைவு செய்துவிட்டதால், அவற்றை மாற்றுவது அவசியமாகியுள்ளது.
"இது வெறும் மாற்று ஏற்பாடுதான்; யாருடனும் எந்தப் போட்டியும் இல்லை" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதுகுறித்து சையத் முகமது ஒபைதுல்லா கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள கடற்படைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் முக்கியமாக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கி வந்தோம். முதலில் டாஃப்னி ரகம், பிறகு அகஸ்டா ரகம். இப்போது எதிர்கால அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்பட்டது. அதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்தவொரு கடற்படையும் சிறந்த மற்றும் நவீன உபகரணங்களையே விரும்பும்."
ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் அகமது தஸ்னிம் கூறுகையில், "இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களும் எங்களுக்கு ஒரு சவால்தான். அவர்களிடம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன, அவை வேகமானவை என்றாலும் சத்தமிடுபவை. அவர்களிடம் நல்ல ஆயுதங்கள் உள்ளன, ஆனால் அவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானிலும் சிக்கல்கள் உள்ளன, ஆனால் எங்களின் ஊக்கமும் அனுபவமும் மிகவும் வலுவானவை" என்றார்.
இந்தியாவிடம் 20 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, ஆனால் அவற்றில் ஏஐபி தொழில்நுட்பம் இல்லை என்று சையத் முகமது ஒபைதுல்லா கூறுகிறார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வளவு முக்கியமானவை?
இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா, இந்தியா மற்றும் பிற பிராந்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் கடற்படை நடவடிக்கைகளால், நீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள், பாகிஸ்தானின் கடற்படை மூலோபாயம் பிரதானமாக தற்காப்பு சார்ந்தது என்பதை வலியுறுத்துகின்றனர். இதன் நோக்கம் எந்தவொரு பகுதியையும் கைப்பற்றுவதல்ல, மாறாக எதிரியின் தாக்குதலைத் தடுப்பதே ஆகும்.
ஓய்வுபெற்ற கொமடோர் (Commodore) சையத் முகமது ஒபைதுல்லா, இதனை 'ஏரியா டினயல் '(area denial) என்ற உத்தியாக குறிப்பிடுகிறார். அதாவது, எதிரி எங்கிருந்து அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியுமோ, அந்த இடத்திற்குள் அவர்கள் வராமல் தடுப்பதே இதன் பொருள்.
"எதிரி நம்மை நெருங்க முடியாவிட்டால், அவர்களால் அச்சுறுத்தலாக இருக்க முடியாது; அதுதான் எங்களின் உத்தி" என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், எட்டு புதிய ஏஐபி நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைக்கப்படுவது, பாகிஸ்தானின் நீருக்கடியிலான போர் திறன், ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கடல்வழித் தகவல் தொடர்புப் பாதைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தான் - சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு

பட மூலாதாரம், Pakistan Navy
முன்னாள் ராணுவ வீரரும், ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரலுமான அகமது தஸ்னிம் கூறுகையில், "கடினமான காலங்களில் நம்மை விட்டு விலகாத ஒரு நாட்டுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். சீனா நம்முடைய நம்பிக்கைக்குரிய நண்பன். கடந்த காலத்தில் நாங்கள் தடைகளைச் சந்தித்துள்ளோம், எனவே உதிரிபாகங்கள் மற்றும் தளவாடங்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பது அவசியமானது" என்றார்.
1964-ல் 'காஸி' நீர்மூழ்கிக் கப்பல் வந்ததையும், 1965-ஆம் ஆண்டு போரின்போது அதன் மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் ஆயுதத் தடைகள் குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார். "உதிரிபாகங்களுக்கே தடை விதிக்கப்பட்டால், அத்தகைய நீர்மூழ்கிக் கப்பலால் என்ன பயன்? ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளி எவ்வளவு முக்கியம் என்பதை இது எங்களுக்கு உணர்த்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் அகமது தஸ்னிமின் கூற்றுப்படி, 'காஸி' கப்பலில் போருக்குப் பிறகு சில பழுதுபார்ப்புப் பணிகள் தேவைப்பட்டதால், அதைச் சரிசெய்ய 'நன்னம்பிக்கை முனை' வழியாகத் துருக்கிக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சூயஸ் கால்வாய் மூடப்பட்டிருந்ததால், நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் கடற்படையின் கூற்றுப்படி, ஹங்கோர் திட்டம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.
கராச்சியில் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவது, பாகிஸ்தானுக்குத் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வதற்கும், பொறியியல் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும், உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கும் திறனை மேம்படுத்துவதற்குமான ஒரு கருவியாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் தகவலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் வடிவமைப்பு, கட்டுமானம், ஆயுத ஒருங்கிணைப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் பொறியாளர் பயிற்சி போன்ற துறைகளில் நிபுணத்துவம் பரிமாறப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, ஹங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல் என்பது வெறும் புதிய நீர்மூழ்கிக் கப்பலாக மட்டும் பார்க்கப்படாமல், பாகிஸ்தானின் கடல்சார் தொழில்துறைக்கான ஒரு நீண்டகால முதலீடாகவும் கருதப்படுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானின் ராணுவ சாதனையின் அடையாளமாக இருந்தது. இன்று, அதே பெயரிலான புதிய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் கடற்படையில் இணைந்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு















