தம்பியின் இறுதி சடங்கிற்கு சௌதியில் இருந்து வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி என தெரியவந்தது எப்படி?

பட மூலாதாரம், Gujarat Police
- எழுதியவர், இஹ்திஷாம் அகமது ஷாமி
- பதவி, செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அக்டோபர் 17-ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், பாகிஸ்தானின் குஜராத்தில் உள்ள ரூபேரி கிராமத்தில் வசித்த இளைஞர் முகமது சுஃபியானை, செளதி அரேபியாவில் வசித்து வந்த அவரது அண்ணன் முகமது பிலால் வாட்ஸ்அப் மூலம் அழைத்தார்.
அந்த அழைப்பில் பிலால், "நீ உடனடியாக குஜராத் நகரத்துக்கு வா. அங்கே உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஒரு முக்கியமான நபரை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதையடுத்து சுஃபியான் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டார். குஜராத் நகரில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, அவருக்கு ஆச்சரியம் அளிக்க வந்தவர் வேறு யாருமல்ல, அவருடைய சொந்த அண்ணன்தான் என்பது தெரியவந்தது.
இருவரும் ஒன்றாக உணவருந்தி, பேசிக்கொண்டிருந்தனர். மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்டனர்.
குஜராத் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஃபைசல் ஷெஹ்சாத், டரேக்ரி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தை அடைந்தபோது, இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று கூறி மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பிலால் தனது தம்பியிடம் கேட்டதாக கூறுகிறார்.
மோட்டார் சைக்கிள் நின்றதும், பிலால் தனது தம்பியின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து, உடலைச் சாலையோரத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது.
கொள்ளைச் சம்பவம் நடந்ததுபோல் காட்டுவதற்காக, கொல்லப்பட்டவரின் கைப்பேசியையும் மோட்டார் சைக்கிளையும் பிலால் எடுத்துச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர், கோட்லாவில் உள்ள பஞ்சாப் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, லாகூருக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.
பிலால் செளதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்திருந்தது அவரது குடும்பத்தினருக்குத் தெரியாது. அன்று இரவு தனது தம்பி கொல்லப்பட்ட செய்தியைக் குடும்பத்தினர் தெரிவித்தபோது, தனக்கு எதுவும் தெரியாததுபோல் பிலால் நடித்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர் ஃபைசல் ஷெஹ்சாத் மேலும் கூறுகையில், பிலால் தனது குடும்பத்தினரிடம், தான் செளதி அரேபியாவிலிருந்து வீடு திரும்பும் வரை தம்பியின் உடலை அடக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், அந்த நேரத்தில் அவர் செளதி அரேபியாவில் இல்லை. பாகிஸ்தானில்தான் இருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இறுதிச் சடங்குக்கான நேரத்தையும் அவர் தாமதப்படுத்தினார். பின்னர், மறுநாள் காலை, அக்டோபர் 18-ஆம் தேதி, கிராமத்துக்கு வந்தபோது, தம்பி கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் செளதி அரேபியாவிலிருந்து அவசரமாகப் பாகிஸ்தானுக்கு வந்ததாகக் காட்டிக்கொண்டார்" என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, பிலால் தனது தம்பியின் இறுதிச் சடங்கிலும் உடல் அடக்கத்திலும் பங்கேற்றதாக ஃபைசல் ஷெஹ்சாத் கூறினார்.
கைது செய்யப்பட்ட பிலால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், கைப்பேசி ஆகியவற்றையும், வழக்குத் தொடர்பான பிற விவரங்களையும் விசாரிக்க வேண்டியிருப்பதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மகனைத் தேடிப் புறப்பட்ட கவலையடைந்த தந்தை
குஜராத் மாவட்டத்தின் தவுலத்நகர் காவல் நிலையத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்கில், பிலால் மற்றும் சுஃபியானின் தந்தை காலித் மஹ்மூத் புகார்தாரராக உள்ளார்.
இந்த முதல் தகவல் அறிக்கையில் யாரும் நேரடியாகக் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. தனது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்ததாகவே புகார்தாரர் கூறியிருந்தார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, 24 வயதான முகமது சுஃபியான் அக்டோபர் 17-ஆம் தேதி பிற்பகல் 1.35 மணிக்கு, " ஒரு வேலையாக குஜராத் நகரத்துக்குச் செல்வதற்காக" மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
"மாலை வரை முகமது சுஃபியான் வீடு திரும்பாததால் எனக்குக் கவலை ஏற்பட்டது. எனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் மகனைத் தேடிப் புறப்பட்டேன். இரவு 8.45 மணியளவில், டரேக்ரி சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த மேம்பாலத்துக்கு அருகே சென்றபோது, சாலையோரத்தில் ஒருவர் கிடந்தார். மோட்டார் சைக்கிளின் விளக்கொளியில் அருகே சென்று பார்த்தபோது, எனது மகன் சுஃபியான் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, சுற்றியுள்ள பகுதிகளில் தேடியபோது, தனது மகனின் மோட்டார் சைக்கிளும் கைப்பேசியும் சம்பவ இடத்தில் இல்லை என்று காலித் மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Gujarat Police
காவல்துறை எப்படிக் கண்டறிந்தது?
வழக்கைத் துப்புத் துலக்குவதற்குச் சிசிடிவி மற்றும் சேஃப் சிட்டி கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் உதவின என வழக்கின் விசாரணை அதிகாரியும் தவுலத்நகர் காவல் நிலையப் பொறுப்பாளருமான இஹ்சான் லத்தீஃப் கூறினார்.
"சம்பவம் நடந்த நாளில் பிற்பகல் 1.35 மணிக்கு முகமது சுஃபியான் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைச் சரிபார்க்கத் தொடங்கினோம். அவர் எந்தப் பகுதிகள் வழியாகச் சென்றாரோ, அந்தச் சாலைகளைச் சுற்றியிருந்த தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணையின்போது, சேஃப் சிட்டி கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த ஒரு பதிவில், முகமது சுஃபியான் பிற்பகல் 3.42 மணிக்கு குஜராத் நகரில் உள்ள மேஜர் அஜீஸ் பட்டி ஷஹீத் மருத்துவமனைக்கு எதிரே வந்து நிற்பது தெரியவந்தது.
"அங்கு அவர் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஒருவருக்காகக் காத்திருந்தார். மாலை 5.27 மணிக்கு ஒருவர் அங்கு வந்தார். சுஃபியான் அவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் நின்று பேசிவிட்டு, அருகில் இருந்த ஓர் உணவகத்துக்குச் சாப்பிடச் சென்றனர்" என்று இஹ்சான் லத்தீஃப் கூறினார்.
"அந்த நபரை எங்களால் அடையாளம் காண முடிந்தது. ஏனெனில், இறுதிச் சடங்கின்போதும் அதற்குப் பிறகான நிகழ்வுகளின்போதும் அவர் கொல்லப்பட்டவரின் மூத்த சகோதரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தம்பி கொல்லப்பட்ட செய்தி கிடைத்ததும் அவசரமாக பாகிஸ்தானுக்குத் திரும்பியதாகவும் கூறியிருந்தார். ஆனால், சிசிடிவி பதிவுகள் வேறு கதையைக் கூறின. தம்பி கொல்லப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டது தெரியவந்தது" என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், மற்றொரு சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, உணவகத்திலிருந்து வெளியேறிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. சுஃபியான் வண்டியை ஓட்டினார். பிலால் பின்னால் அமர்ந்திருந்தார்.
"டரேக்ரியின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமார் அரை மணி நேரம் இருவரும் கண்காணிப்புக் கேமராக்களில் தென்படவில்லை. அதன் பிறகு கிடைத்த பதிவுகளில், பிலால் மட்டுமே மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு குஜராத் நகரத்தை நோக்கித் திரும்புவது தெரிந்தது" என்று இஹ்சான் லத்தீஃப் கூறினார்.
அந்த நேரத்தில் சுஃபியான் காணாமல் போயிருந்தார். எனவே, சுஃபியானைக் கொலை செய்தது அவரது மூத்த சகோதரர் பிலால்தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
உடலுக்குக் கீழே கிடந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கத்தியில் பிலாலின் கைரேகைகளும் காணப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Gujarat Police
பிலால் ஏன் செளதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்தார்?
கொல்லப்பட்ட சுஃபியானின் தந்தை காலித் மஹ்மூத் பிபிசி உருது சேவையிடம் பேசுகையில், இரு சகோதரர்களுக்கும் இடையே பரம்பரைச் சொத்துப் பங்கீடு தொடர்பாகப் பிரச்னை இருந்ததாகவும், ஆனால் அந்தப் பிரச்னையைத் தாம் தீர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
"எனக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்; மற்றொருவர் ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டார். பிலால் செளதி அரேபியாவில் வேலை செய்துவந்தார். சுஃபியான் என்னுடனேயே பாகிஸ்தானில் இருந்தார். வீட்டைப் பிரிப்பது பற்றிப் பேச்சு வந்தபோது, பிலாலுக்கு கிராமத்துக்கு வெளியே விவசாய நிலத்தைக் கொடுத்தேன். இனி அந்த வீட்டில் அவருக்குப் பங்கு இருக்காது என்றும் கூறினேன்" என்று அவர் தெரிவித்தார்.
காலித் மஹ்மூத்தின் கூற்றுப்படி, தனது இளைய சகோதரர் சுஃபியான் தனக்கு அநீதி இழைப்பதாகவும், பரம்பரைச் சொத்தில் தனக்குரிய பங்கைப் பெறுவதற்குத் தடையாக இருப்பதாகவும் பிலால் நினைக்கத் தொடங்கியிருந்தார்.
சொத்துப் பங்கீடு தொடர்பான முடிவைத் தனது தந்தை எடுக்கவில்லை என்றும், தனது தம்பி சுஃபியான்தான் எடுத்தார் என்றும் பிலால் கருதியதாகவும் காலித் கூறினார்.
"இத்தனை நடந்திருந்தாலும், என் மகன் பிலால் இவ்வளவு கொடூரமான முடிவை எடுப்பான் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
சுஃபியானின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் பிலால் முன்னின்று செயல்பட்டதாகவும் காலித் கூறினார்.
"அவர் அனைவரையும் கட்டிப்பிடித்து அழுதார். 'எந்தக் கொடூரமானவர்கள் என் தம்பியை இவ்வளவு கொடூரமாகக் கொன்றார்கள் என்று தெரியவில்லையே. நான் உயிருடன் இருக்கும் வரை என் தம்பியின் ரத்தத்துக்குப் பழிவாங்குவேன்' என்று கூறினார்" என காலித் நினைவுகூர்ந்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, விசாரணைக்காக பிலாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் காவல்துறையினர் தெரிவித்தபோது, யாருக்கும் அதன் பின்னால் உள்ள காரணம் தெரியவில்லை
"விசாரணைக்காக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைத்துச் செல்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு என்னைக் காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி, பிலாலின் முன்னால் அமர வைத்தார்கள். அப்போது அவரது கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. நான் அதிர்ச்சியடைந்து, காவல்துறை அதிகாரியிடம், 'தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்' என்று கூறினேன். அதற்கு அந்த அதிகாரி, 'முதலில் உங்கள் மகனிடம் பேசுங்கள், என்ன நடந்தது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்' என்றார்" என்று காலித் தெரிவித்தார்.
விசாரணையின்போது பிலால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், "என்னைச் சொத்திலிருந்து விலக்கி அநீதி இழைத்துவிட்டார்கள்" என்று அவர் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செளதி அரேபியாவில் வசித்து வந்தார். அங்கு கனரக டிரக் ஓட்டுநராகப் பணியாற்றினார்.
கொல்லப்பட்ட சுஃபியான் மலேசியாவில் இரண்டு ஆண்டுகள் வசித்துவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பியிருந்தார். தற்போது ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்று வந்தார்.
"எனது உலகமே அழிந்துவிட்டது. என்னைத் தவிர வேறு யாருக்கும் இழப்பு ஏற்படவில்லை. எனது இரண்டு மகன்களும் என் கண் முன்னாலிருந்து போய்விட்டார்கள். ஒருவன் கொல்லப்பட்டுவிட்டான்; மற்றொருவன் வாழ்நாள் முழுவதும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கப் போகிறான்" என்று காலித் மஹ்மூத் வேதனையுடன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































