'செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொன்றுவிடும்' ஆபத்து இருப்பதாக எச்சரித்த ஆய்வாளர்

'செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொன்றுவிடும்' ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டாம் கெர்கன்
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுக்குள் அது "அனைத்து மனிதர்களையும் அழித்துவிட" 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

தற்போதுள்ள ஏஐ மாடல்களால் மனிதகுலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு "குறைவுதான்" என்றாலும், எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் தானாகவே மேம்பட்டு, மனித குலத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாறிவிடுமோ என்ற "கவலை" தனக்கு இருப்பதாக இவான் ஹுபிங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் எவ்வாறு மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும் என்பது குறித்து அவர் தனது பதிவில் விரிவாகக் குறிப்பிடவில்லை.

இருப்பினும், ஏஐ தொழில்நுட்பம் உண்மையாகவே ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கட்டத்தைத் தாண்டி, அந்த ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்ற விவாதத்திற்கு மாறியுள்ள நிலையில், அவரது இந்தக் கருத்துகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து அண்மையில் விலகியவரும், ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளருமான ஜேக்கோப் காக்சன் வெளியிட்ட மற்றொரு பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாகவே ஹுபிங்கர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

"இந்த நிறுவனங்கள் எவையும் பொறுப்புடன் செயல்படவில்லை" என்று காக்சன் குற்றம் சாட்டியிருந்தார். "இவை விரைவில் எதை வேண்டுமானாலும் ஹேக் செய்யக்கூடிய, எந்தவொரு துறையையும் ஒரே இரவில் புரட்டிப் போடக்கூடிய, உண்மையான அதிகாரத்தையும் வளங்களையும் பெறக்கூடிய அதீத மனிதத் திறன் கொண்ட அமைப்புகளாக மாறிவிடும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கோரி ஓபன்ஏஐ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளோம். ஐ.நா. சபைக்கு ஏஐ குறித்தும் ஆலோசனைகளை வழங்கி வரும் கணினி அறிவியல் நிபுணர் டேம் வெண்டி ஹால், ஹுபிங்கர், காக்சன் ஆகியோரின் சமூக ஊடக பதிவுகள் தன்னை "பேரிதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக" பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசி ரேடியோ ஃபோரின் 'வேர்ல்ட் அட் ஒன்' நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் தங்களது பங்குகளை வெளியிடத் தீவிரமாக முயன்று வரும் சூழலில், இத்தகைய கருத்துகள் ஒருவித "மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியாகவும் " இருக்கலாம் என்றார்.

இருப்பினும் அவர், "யாராவது ஏன் அப்படிப் பேச விரும்ப வேண்டும்? இதுதான் அவர்களின் மதிப்பு அமைப்பு என்றால், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களை நான் கேட்டுக் கொள்வேன்" என்றார்.

சாட்போட் (Chatbot) மற்றும் கோடிங் பணிகளுக்கு உதவும் 'கிளாட்' (Claude) என்ற ஏஐ கருவியை ஆந்த்ரோபிக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாட்போட் மற்றும் கோடிங் பணிகளுக்கு உதவும் 'கிளாட்' என்ற ஏஐ கருவியை ஆந்த்ரோபிக் நிறுவனம் தயாரித்து வருகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ராஜிநாமா காரணமாக, கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரும், சர் கியர் ஸ்டார்மரின் தலைமை செயலாளருமான டாரன் ஜோன்ஸ், பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமருக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான வளர்ச்சிக்காக ஒரு புதிய பன்னாட்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவு வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கங்கள் ஒன்றிணைந்து "கூட்டாகச் செயல்பட வேண்டும்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அரசாங்கங்கள் இந்த எச்சரிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வளர்ச்சியின் வேகம் காரணமாக, இது நமக்கு ஒரு பிரச்னையா இல்லையா என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பே நாம் மிகப்பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும்" என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, ஏஐ ஆபத்துகளை மதிப்பிடுவதில் உலகின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிறுவனத்திடம் (AISI) ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய ஏஐ மாடலை வழங்க மறுத்துவிட்டதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் ஊழியர்களின் சமூக ஊடக பதிவுகள் குறித்தும், பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனத்துடனான நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிக்க ஆந்த்ரோபிக் நிறுவனம் மறுத்துவிட்டது.

புதிய ஏஐ மாடல் பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனத்திடம் வழங்கப்படவில்லையா என்பது குறித்து அமைச்சரவை அலுவலகப் பேச்சாளர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, "மாடல்களை பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக ஆந்த்ரோபிக் உள்ளிட்ட தொழில்முறை கூட்டாளிகள் அது தொடர்ந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது" என்று மட்டும் தெரிவித்தார்.

'செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொன்றுவிடும்' ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

பேரறிவுக்கான எந்தத் திட்டமும் இல்லை

பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ள தனது பதிவில், ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்திற்கே பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை "நாங்கள் உண்மையிலேயே தீவிரமாக நம்புகிறோம்" என்று ஹுபிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

"ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது தரப்பில் முழு முயற்சியுடன் பேணி வருவதாக நான் நம்புகிறேன். ஆனால் பேரறிவுக்கான சீரமைப்புச் சிக்கலை (Alignment) தீர்ப்பதற்கான தெளிவான திட்டம் எங்களிடம் இப்போதைக்கு இல்லை. அந்த இலக்கை நோக்கி நாங்கள் இன்னும் சரியாகப் பயணிக்கவும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

மனிதர்களின் நெறிமுறை சார்ந்த கருத்துகளையும் கொள்கைகளையும் ஏஐ தொழில்நுட்பத்திற்குள் புகுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஏஐ சீரமைப்பு' துறையில்தான் ஹுபிங்கர் பணியாற்றி வருகிறார். எளிமையாகச் சொன்னால், மனிதர்கள் எதை மதிக்கிறார்களோ அதன்படியே ஏஐ செயல்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாகப் பல முன்னணி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த கோடைக் காலத்தில் தன்னாட்சியாகச் செயல்பட அனுமதிக்கப்பட்ட ஏஐ முகவர்கள் சில சைபர் தாக்குதல்களில் ஈடுபட்ட சம்பவங்களே இதற்குச் சான்று.

ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் மற்றும் மெட்டா ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களது ஏஐ கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஹேக்கிங் முயற்சிகளை ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தனது பாதுகாப்பு அறிக்கையில், தங்களது ஏஐ மாடல்கள் கற்பனையான ஒரு சக்தி வாய்ந்த நிறுவனத்தின் விருப்பங்களுக்கு முரணாகச் செயல்பட்டு, அதன் அமைப்புகளைச் சுரண்டும் அல்லது சேதப்படுத்தும் அபாயம் மிகக் குறைவு என்று ஆந்த்ரோபிக் குறிப்பிட்டிருந்தது.

அதேபோல, மிகவும் திறன் வாய்ந்த ஏஐ கருவிகள் "தானியங்கி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை" மேற்கொண்டு, "ஏஐ மூலம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய தீங்குகளை" விளைவிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவுதான் என்று அது கூறியிருந்தது. இருப்பினும், முந்தைய மதிப்பீடுகளைக் காட்டிலும் "இந்த மதிப்பீட்டில் தங்களுக்கு இப்போது அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை" என்றும் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.

'செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொன்றுவிடும்' ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

"நாங்கள் சாத்தியமான வேகத்திற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண்கிறோம்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஓபன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட் மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் தலைவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே எச்சரித்திருந்தனர்.

ஆனால், நிறுவனங்களால் ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதற்கான சான்றுகள் வெளிவரும் நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த எச்சரிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜாகுப் பச்சோக்கி, ஏஐ வளர்ச்சியில் "தீவிர எச்சரிக்கை" விடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். "எதிர்காலத்தை மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருக்க" கூடுதல் தலையீடுகள் தேவைப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைவர்களான டாரியோ அமொடெய் மற்றும் ஜாரெட் கபிலன் உள்ளிட்ட இந்தத் துறையின் முக்கியப் பிரமுகர்கள், கடந்த சில மாதங்களாகவே ஏஐ வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏஐ நிறுவனங்களைச் சேர்ந்த 1,300 பணியாளர்கள் கையெழுத்திட்ட திறந்த கடிதம் ஒன்றில், தானியங்கி ஏஐ வளர்ச்சியின் எல்லைகளைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் கருவிகளை உருவாக்குவதற்கான சர்வதேச முயற்சியை அமெரிக்க அரசு ஆதரிக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு