அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம்; இந்தியாவுக்கு பின்னடைவா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கைசர் அண்ட்ராபி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு முக்கியமான ராஜதந்திர சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், சமீபத்திய ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் நடந்த மிக முக்கியமான இந்த ராஜதந்திர நிகழ்வில், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விட்டதா என்ற விவாதத்தையும் இந்த ஒப்பந்தம் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர நாடுகளின் முயற்சியால் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தச் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் பாகிஸ்தான் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வழிவகை செய்யும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.
திங்கட்கிழமையன்று இந்த ஒப்பந்தத்திற்கு வரவேற்பு தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இது அமைதியை மீட்டெடுக்கவும், முக்கிய கடல்சார் வழித்தடங்கள் வழியாக கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்த மோதலால் "உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள்" ஏற்பட்டதாகவும், பல நாடுகளில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானைக் குறிப்பிடாத இந்தியா

பட மூலாதாரம், Getty Images
"எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு நிலையான உடன்பாட்டை எட்டுவோம் என நாங்கள் நம்புகிறோம்" என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பிரதமர் மோதி குறிப்பிடவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக உறவு சுமுகமாக இல்லாத போதிலும், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் குறைந்தது 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்தது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம் சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்குள் இருந்த 'பயங்கரவாத முகாம்கள்' மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே சுமார் நான்கு நாட்களுக்கு மோதல் நீடித்தது. பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தத்தை அறிவித்தார்.
இந்தப் போர் நிறுத்தத்திற்குத் தானே மத்தியஸ்தம் செய்ததாக அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றத்தை வரவேற்றார். மேலும், இந்த போர்நிறுத்தம் பிராந்தியத்தில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு தடையுமின்றி கப்பல்கள் சுதந்திரமாக இயங்குவதை இந்தியா விரும்புவதாகவும், அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தமானது, யுக்ரேனில் அமைதிக்கான முயற்சிகளை விரைவுபடுத்த உதவும் என்றும் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் பலரும் இந்த ஒப்பந்தத்தை மேற்கு ஆசியாவிற்கான ஒரு முக்கிய தூதரக வெற்றியாக விவரித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டது.
"லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த" இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
"தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான" அடித்தளத்தை அமைக்க, மத்தியஸ்தம் செய்த நாடுகள் இந்த வாரம் கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்; ஹோர்முஸ் நீரிணையில் உள்ள இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை நீக்குவதற்குத் தான் ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"அனைவருக்கும் வாழ்த்துகள். உலகெங்கிலும் உள்ள கப்பல்களே, உங்கள் இன்ஜின்களை இயக்கத் தொடங்குங்கள். கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி தொடரட்டும்" என அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தினால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய 'வுட்ரோ வில்சன் சர்வதேச அறிஞர்கள் மையத்தின்' தெற்காசிய நிறுவன இயக்குநர் மைக்கேல் குகல்மேன், அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு மத்திய கிழக்கில் அதன் நிலையை வலுப்படுத்தக்கூடும் என்றும், இந்தியாவுடனான அதன் மூலோபாயப் போட்டியில் அதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெறும் தூதரக வெற்றி மட்டுமல்ல, பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பின்னடைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள், இந்தியாவுடனான மூலோபாயப் போட்டியில் அதற்கு ஒரு பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது" என குகல்மேன் கருதுகிறார்.
எரிசக்தி, முதலீடு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் ஆதாரமாக விளங்கும் மத்திய கிழக்கு பிராந்தியம் இரு நாடுகளுக்குமே மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்பிராந்தியத்தில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் செல்வாக்கை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த ஒப்பந்தம் உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கின் பல முக்கிய நாடுகள் இப்போது பாகிஸ்தானை ஒரு முக்கியமான அதிகார மையமாக நினைக்கின்றன. அவை ஒருவேளை பாகிஸ்தானை நிகர பாதுகாப்பு வழங்குநராகவும் பார்க்கலாம்" என்றார்.
பாகிஸ்தான் அரசும் ராணுவமும் அரசியல் அழுத்தம் மற்றும் மக்களின் அதிருப்தி காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தத் தூதரக வெற்றியானது, உள்நாட்டில் பாகிஸ்தான் தலைவர்களின் மதிப்பை உயர்த்தக்கூடும் என்று குகல்மேன் நம்புகிறார்.
இது குறித்து விளக்கமாக பேசும் அவர், "பயங்கரவாதம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை சார்ந்த பல ஆண்டுகால எதிர்மறையான செய்திகளுக்குப் பிறகு, நாட்டின் சர்வதேச பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்ப இது உதவக்கூடும்" என்றார்.
இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரியும், 'சவுத் ஏசியன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா' அமைப்பின் நிறுவனருமான நிருபமா மேனன் ராவ் பிபிசியிடம் பேசுகையில், பாகிஸ்தானின் தலையீடு குறித்த இந்தியாவின் சந்தேகம் பல தசாப்த கால விரோதப் போக்கிலிருந்து உருவானது என்று கூறினார். எவ்வாறாயினும், தூதரக உறவுகளை உணர்ச்சிகளின் அடிப்படையில் பார்க்காமல், தேசிய நலன்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேலும், "பாகிஸ்தானுடனான நமது உறவுகள் மிகவும் மோசமாக இருப்பதால், பாகிஸ்தான் ஆற்றிவரும் பங்கிற்குப் பதிலளிப்பதில் ஒருவித தயக்கம் நிலவுகிறது" என்றார்.
இருப்பினும், இந்த விவகாரத்தை உணர்ச்சிகளின் அடிப்படையில் மதிப்பிடாமல், அதன் விளைவுகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்று நிருபமா மேனன் ராவ் வலியுறுத்தினார்.
"ராஜதந்திரம் என்பது தார்மீக விளையாட்டோ அல்லது வெற்றி-தோல்விகளைத் தெளிவாகக் காட்டும் கிரிக்கெட் ஸ்கோர்கார்டோ அல்ல" என அவர் விளக்குகிறார்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா-இரான் இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரவேற்ற போதிலும், இந்த முக்கியமான ராஜதந்திர முன்னெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கத் தவறிய இந்தியா, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை மற்றும் அதன் தூதரக நகர்வுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் தனது பதிவில், "வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் இடம் குறித்த சங்கடமான கேள்விகளை இந்தத் தருணம் எழுப்புகிறது. பாகிஸ்தான், செளதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் முயற்சியால் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. இரானுடனான நமது கலாசார உறவுகள் மற்றும் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோதிக்கு தனிப்பட்ட நட்பு இருந்ததாகப் பெரிதும் பேசப்பட்ட போதிலும் இந்த ஒட்டுமொத்தப் விவகாரத்தில் இந்தியா எங்கும் இடம்பெறவில்லை" என்று எழுதியுள்ளார்.
இந்த உறவுகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவோ, இந்தியாவின் தூதரக முக்கியத்துவத்தை அதிகரிக்கவோ அல்லது அமைதி முயற்சியில் ஏதேனும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவோ இந்திய அரசு தவறிவிட்டது என்று கேரா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும், அதை ஏற்றுமதி செய்வதிலும் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்த இந்தியா பல ஆண்டுகளாக பணியாற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளின் காரணமாக, பாகிஸ்தான் FATF-ன் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இன்று, உலகளாவிய ஸ்திரத்தன்மையில் ஒரு முக்கியப் பங்காற்றும் நாடாகவும், அமைதியின் அடையாளமாகவும் பாகிஸ்தான் தன்னை வெற்றிகரமாக முன்னிறுத்திக்கொண்டுள்ளது" என்றார்.
அமைதியைக் கொண்டுவருவதில் பாகிஸ்தானின் பங்கு வரவேற்கப்பட வேண்டும் என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கல்லோல் பட்டாச்சார்யா, பிராந்திய ஸ்திரத்தன்மை இந்தியாவின் நலன்களுக்கும் உகந்தது என கருதுகிறார்.
குறிப்பாக பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம், மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பகுதியை இந்தியா பெரிதும் நம்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு எதிரி நாட்டின் நேர்மறையான பங்கை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்தியா முதிர்ச்சியும் வலிமையும் கொண்டது என்று அவர் கூறுகிறார்.
"பாகிஸ்தான் தனது முயற்சியின் மூலம் இந்தியாவுக்கு பயனளிக்கும் வகையிலான ஒரு பங்கை ஆற்றியுள்ளது. எனவே, நாம் தெற்காசியாவின் பிராந்திய அரசியல் எல்லைகளைக் கடந்து ஆக்கப்பூர்வமான முறையில் சிந்திக்க வேண்டும்" என பட்டாச்சார்யா கூறுகிறார்.
வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்படும் பிராந்திய அமைதி இந்தியாவின் நலன்களுக்குச் சாதகமாக இருக்கும்போது, பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தியா பாதுகாப்பற்றதாக உணரத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.
"இதற்குப் பதிலாக, பாகிஸ்தானின் நேர்மறை நகர்வை இந்தியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது நீண்டகாலப் பங்காளியான இரானுடனான உறவை இந்தியா மேம்படுத்திக்கொண்டு மறுசீரமைப்பது அவசியம்" என கல்லோல் பட்டாச்சார்யா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





















