'36 பந்துகளில் சூர்யவன்ஷி அடித்த சதம் வீண்' – 229 ரன் இலக்கை சேஸ் செய்து ஹைதராபாத் வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
இந்தப் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 25) நடந்தது. இந்த சீசன், இந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி இது.
காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை களமிறங்காமல் இருந்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற கம்மின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
வேகப்பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே சன்ரைசர்ஸ் பிளேயிங் லெவனில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மதுஷன்கா, ஹர்ஷ் துபே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துஷார் தேஷ்பாண்டே மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 228 ரன்கள் எடுத்தது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இஷான் கிஷன் 74 ரன்கள் எடுத்தார். அபிஷேக் ஷர்மாவும் அரைசதம் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். இரு அணிகளுமே 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கின்றன.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

பட மூலாதாரம், ANI
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முந்தைய போட்டியில், பிரஃபுல் ஹிங்கே பந்துவீச்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. அந்த ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் ஹிங்கே. ஆனால், இந்தப் போட்டியில் அப்படியே தலைகீழாக இருந்தது. ஹிங்கே வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசினார் சூர்யவன்ஷி.
அப்போது தொடங்கிய அவரது அதிரடி கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்தது. பேட் கம்மின்ஸ், இஷான் மலிங்கா, சகிப் ஹுசைன், ஷிவாங் குமார் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து நொறுக்கினார். அதனால் 15 பந்துகளிலேயே அவர் அரைசதம் கடந்தார். இந்தத் தொடரில் ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக அவர் 15 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்த சீசனில் வெறும் 8 போட்டிகளில் மூன்றாவது முறையாக அதைச் செய்தார் 15 வயது சூர்யவன்ஷி.
அரைசதம் அடித்த பிறகும் அவர் அதே வேகத்தில் ஆடினார். அதனால் மிடில் ஓவர்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்ரேட் குறையாமல் சென்றுகொண்டே இருந்தது. அவர் அதிரடியாக ஆடியது துருவ் ஜுரெல் மீது நெருக்கடி ஏற்படாமலும் பார்த்துக்கொண்டது.
36 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, அதற்கடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருடைய 103 ரன் இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் வந்தன.
இதன்மூலம் ஆண்கள் டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. இது அவருடைய 26வது இன்னிங்ஸ். இதற்கு முன் உஸ்மான் கான் தன்னுடைய 33வது இன்னிங்ஸில் 4வது சதத்தை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
சூர்யவன்ஷி அவுட் ஆவதற்கு முந்தைய ஓவர் ஜுரெல் கூட ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் டானவன் ஃபெரீரா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
அதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் இது.

பட மூலாதாரம், ANI
ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ் முடிந்ததும் பேசிய சூர்யவன்ஷி, "முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கவேண்டும் என்று எனக்கு எந்த திட்டமும் இல்லை. போட்டிக்கு முன்னதாக, நாங்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தோம். எங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தோம். ஆடுகளம் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதனால் என்னுடைய ஆட்டத்தில் நான் உறுதியாக இருந்தேன். அணிக்காக என்னுடைய 100 சதவீத உழைப்பையும் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். என்னால் என்னென்ன ஷாட்கள் விளையாட முடியும் என்று யோசித்து, அதை மனசுக்குள் கற்பனை செய்து பார்த்தேன். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கிறது. புதிய பந்தில வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைத்தது. நல்ல கட்டுப்பாட்டோடு பந்துவீசுகிறார்கள். நான் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்த முயற்சி செய்கிறேன்." என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில், அபிஷேக் ஷர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் துருவ் ஜுரெல். ஆனால், அதே ஓவரில் டிராவிஸ் ஹெட் கேட்ச்சைப் பிடித்தார் ஜுரெல். முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்து சன்ரைசர்ஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஆர்ச்சர்.
ஆனால், ஆர்ச்சர் தவிர்த்து வேறு எந்த ராஜஸ்தான் பந்துவீச்சாளரும் சன்ரைசர்ஸ் பேட்டர்களை அச்சுறுத்தவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இடைவிடாது அதிரடியாக ஆடினார்கள். அதனால் பவர்பிளேவை 89/1 என முடித்தது சன்ரைசர்ஸ்.
அதன்பிறகும் அதே வேகத்தில் இருவரும் விளையாடினார்கள். ஹிட்மெயர், ஜடேஜா போன்றவர்கள் கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட, அது ராயல்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அபிஷேக் ஷர்மா, இஷன் கிஷன் இருவருமே தங்களின் 24வது பந்தில் அரைசதத்தை நிறைவு செய்தார்கள்.
57 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா, ஸ்பின்னர் டானவன் ஃபெரீரா வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்த சில ஓவர்களில் இஷான் கிஷனும் வெளியேறினார். அவர் 31 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த வீரர்கள் வெளியேறினாலும், கிளாசன் - நித்திஷ் ரெட்டி ஜோடி சன்ரைசர்ஸை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. நித்திஷ் ரெட்டி 36 ரன்களுக்கும், கிளாசன் 29 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
சலீல் அரோரா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சன்ரைசர்ஸுக்கு முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. 5 வெற்றிகளோடு புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹெய்ன்ரிக் கிளாசன், சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), அனிகேத் வெர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன், இஷான் மலிங்கா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆர்.ஸ்மரன், டிராவிஸ் ஹெட், லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் பட்டேல்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரன் ஹிட்மெயர், டானவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஷுபம் துபே, லுவான் ட்ரே-பிரிடோரியஸ், ரவி பிஷ்னாய், சந்தீப் ஷர்மா, ரவி சிங்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































